சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடும் அனைத்து கட்சியினரும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் தலைவர்களை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி, திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் ஜி. சந்திரபோஸ் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்தப் புகார்களின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பல்வேறு இணையதளப் பக்கங்கள் மற்றும் ராய்ஸ் ஆப் காமன் ரூட் என்ற அமைப்புக்கு எதிராக, திமுக மற்றும் அதன் தலைவர்களை களங்கப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட அவதூறு பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் 19 புகார்கள் அளிக்கப்பட்டும், எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆளுநருக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை, திமுக அளித்த புகார்களில் மட்டும் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும், எனவே இந்தப் புகார்களை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, நியாயமான மற்றும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சுப்தியேன், விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக இதுபோன்ற பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதாகவும், சமீப காலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் தரம் தாழ்ந்த மற்றும் அவதூறான பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான விரிவான நடைமுறை ஒன்றை காவல்துறை வகுத்து வருவதாகவும், அதனை இறுதி செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார். அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடும் விவகாரத்தில் எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது என்றும், இதுபோன்ற பதிவுகளை வெளியிடும் நபர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதன் மூலம், திமுகவினர் அளித்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தாண்டி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் எந்தக் கட்சியினராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுவான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, அவதூறு பதிவுகளை உடனடியாக நீக்குவதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறையை (Standard Operating Procedure) காவல்துறை உருவாக்கி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீதான அடுத்தகட்ட விசாரணை இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது.
