https://republictn.com/

நாடாளுமன்ற அரசியல், தேசியக் கூட்டணிக் கணக்குகளில் எப்போதும் ‘மாஸ்டர் பிரைன்’ என்று அழைக்கப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், இப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியைக் கைப்பற்றத் தீவிர முயற்சிகளில் இறங்கியிருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்தோடு முடிவடைய உள்ள நிலையில், அடுத்த கட்ட பாய்ச்சலுக்குச் சிதம்பரம் தயாராகி வருகிறார்.

கார்கேவுக்கு மாற்றா?
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் இந்த ஆண்டு அக்டோபருடன் முடிகிறது. அதே சமயம், அடுத்த ஆண்டு 2027 உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மிக முக்கிய 7 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் வரிசையாக வரவுள்ளன.

இந்த இக்கட்டான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களை கார்கேவின் தலைமையில் சந்திக்க காங்கிரஸ் மேலிடம் பெரிதாக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் முறையான உட்கட்சித் தேர்தல் நடத்தாமல், ‘இடைக்காலத் தலைவர்’ ஒருவரைத் தேர்ந்தெடுக்கவே டெல்லி தலைமை ஆலோசித்து வருகிறது. இந்தப் பந்தயத்தில் அசோக் கெலாட், சித்தராமையா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டாலும், ப.சிதம்பரத்தின் பெயரே மிகத் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.

ஸ்டாலின், விஜயை சந்தித்த சிதம்பரம்
தேசிய அளவில் தலைவர் பதவியைப் பிடிக்க வேண்டுமானால், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவர்களின் ஆதரவு மிக முக்கியம் என்பதைச் சிதம்பரம் நன்றாகவே அறிவார். அதற்கான அஸ்திவாரத்தைத் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலிருந்தே அவர் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க. இடையே ஏற்பட்ட சில அரசியல் நகர்வுகளுக்கு மத்தியிலும், சிதம்பரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதைவிடப் பரபரப்பாக, தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து, அரியணை ஏறியிருக்கும் தவெ தலைவரும், முதலமைச்சருமான விஜயையும் அவர் ரகசியமாகச் சந்தித்து ஆதரவு கோரியுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

ப.சிதம்பரத்தின் அஸ்திரங்கள்
இதுவரை தேசிய அளவில் பல மாநிலங்களில் காங்கிரஸ் எடுத்த சில முரண்பாடான முடிவுகளால் கூட்டணிக் கட்சிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. நான் தலைவரானால், அத்தகைய முரண்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்வேன். கூட்டணிக்கு முன்னுரிமை: அனைத்துப் பிராந்தியக் கட்சிகளையும் சமமாக மதித்து, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு ‘பாலமாக’ச் செயல்படுவேன்” என ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ப.சிதம்பரம் வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

டெல்லியில் தலைவர் நாற்காலி… தமிழ்நாட்டில் அஸ்திவாரம்
காங்கிரஸின் சீனியர் தலைவராகவும், நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்த சிதம்பரத்திற்கு இருக்கும் நிர்வாகத் திறமை மற்றும் கூட்டணிக் கட்சிகளுடனான சுமுக உறவு ஆகியவை இந்த முறை அவருக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அக்டோபரில் டெல்லி காங்கிரஸ் தலைமைப் பீடத்தில் ஒரு தமிழர் அமருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 weeks ago at 2 weeks ago