ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீ ராம்பு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுனிதா மற்றும் சூரிய கியான் தேவி என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர். ராம்சிங் தனது இரண்டு மனைவிகள் மற்றும் தாய் பூசிதேவி உள்ளிட்டோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீ ராம்பு கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ராம்சிங்கின் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்ததாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஆய்வு செய்ததில், காருக்குள் கருகிய நிலையில் ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி, தாயார் பூசிதேவி ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், வயல்வெளியை ஒட்டி அவரது உறவினர் மகிமா சௌதரி என்பவரின் உடலும் மீட்கப்பட்டது.
இதையடுத்து, நான்கு பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையிலும், தடயவியல் நிபுணர்கள் நடத்திய சோதனைகளிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டதால், போலீசார் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராம்சிங்கின் முதல் மனைவி சுனிதா மற்றும் அவரது பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுனிதாவுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். ராம்சிங் இரண்டாவது திருமணமாக சூரிய கியான் தேவியை திருமணம் செய்து கொண்டு, முதல் மனைவி, இரண்டாவது மனைவி மற்றும் தாயாருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த திருமணம் தொடர்பாக ராம்சிங்குக்கும் முதல் மனைவி சுனிதாவுக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று இரவு, இரண்டாவது திருமணம் தொடர்பான பிரச்சினையால் ராம்சிங்குக்கும் சுனிதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராம்சிங்குக்கு ஆதரவாக அவரது தாயார் பூசிதேவி மற்றும் உறவினர் மகிமா சௌதரி ஆகியோர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுனிதா மற்றும் அவரது பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து, ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி, தாயார் பூசிதேவி மற்றும் உறவினர் மகிமா சௌதரி ஆகிய நான்கு பேரையும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் கொலையை மறைக்க, உடல்களை காருக்குள் வைத்து தீ வைத்து, அது விபத்து போன்றதாக காட்ட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நான்கு பேரின் உடல்களையும் வீட்டில் இருந்து சொகுசு காரில் ஏற்றி, சுமார் 500 மீட்டர் தொலைவில் வயல்வெளியை ஒட்டி உள்ள நெடுஞ்சாலை பகுதியில் கொண்டு சென்று, காரை நிறுத்தி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்துக்குப் பிறகு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் முன்னிலையில் சுனிதா மற்றும் அவரது பிள்ளைகள் அழுது, புரண்டு, கண்ணீர் வடித்து மயக்கம் போட்டது போல நடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், சுனிதா அளித்த விளக்கத்தில், அவரது மாமியார் பூசிதேவி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியதால், ராம்சிங் உள்ளிட்டோர் அவரை காரில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் சாலையில் கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது தெரியவந்துள்ளது.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராம்சிங் மற்றும் மூன்று பேரின் மரணம் தொடர்பான இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
