சிவகங்கை மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதான திருமணமான பெண் காவலர், சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருப்புவனத்தைச் சேர்ந்த இராபின் (28) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு, இராபின் அந்தப் பெண் காவலரை சிவகங்கை அருகேயுள்ள ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இராபினின் நண்பர்களான சித்தலங்குடியைச் சேர்ந்த மகாராஜா (25) மற்றும் ஹரிஷ் (21) ஆகியோரும் வந்துள்ளனர்.
அப்போது, மூவரும் இணைந்து பெண் காவலருக்கு பாலியல் தொல்லை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களிடமிருந்து தப்பிய பெண் காவலர், உடனடியாக அவசர காவல் உதவி எண் 100-ஐ தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பெண் காவலரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பிச் செல்ல முயன்ற இராபின், மகாராஜா மற்றும் ஹரிஷ் ஆகிய மூவரையும் போலீசார் விரட்டிப் பிடித்தனர்.
இதுதொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அமலா எட்வின் ஆகியோர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
