Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை நிறுவப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒதியத்தூர் கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலை, அவர் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சிலையின் வடிவமைப்பு மற்றும் கிராமத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, வருவாய்த் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தச் சிலையை இரும்புத் தகடுகளால் மூடி சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் நள்ளிரவில் திரண்டு, இரும்புத் தகடுகளை வலுக்கட்டாயமாக அகற்றியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிகாரிகள் மீண்டும் சிலையை மூடுவதற்காக சென்றபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கல்வீச்சு மற்றும் வன்முறையாக மாறியதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியதுடன், லேசான தடியடியும் நடத்தினர்.

இதையும் படியுங்க  தூக்கத்தில் நடந்த பயங்கரம்.. மதுரையில் அதிகாலையிலேயே 47 பேருக்கு நேர்ந்த சோகம்!

இந்த மோதலில் பெண் காவலர் ஒருவர் உட்பட மூன்று போலீசார் மற்றும் சில பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 15-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் அமைந்துள்ள காமராஜர் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் சிலைகளும் இரும்புத் தகடுகளால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒதியத்தூர் கிராமம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நிலைமையை தொடர்ந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago