Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பழத்தோட்டம் பகுதியில், செங்கல்பட்டு–காஞ்சிபுரம் நெடுஞ்சாலையோரத்தில் அரசினர் சிறுவர் பாதுகாப்பு இல்லம் (கூர்நோக்கு மையம்) செயல்பட்டு வருகிறது.

இங்கு, 18 வயதிற்குக் குறைவான வயதில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, தற்போது 18 முதல் 21 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கு பேக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 78 பேர் இந்த அரசு பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தொலைக்காட்சி பார்க்க அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12, 2026) இரவு, வழக்கம்போல் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, இரு தரப்பினருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மோதலை தடுக்கச் சென்ற வார்டன் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க  பில்டப்பா..? பிலாவா? உலகம் பார்த்துட்டே இருக்கணும்..! ரீல்ஸில் தொழில் அழைப்பு! அமைச்சர் கீர்த்தனாவின் புதிய ஸ்டைல்..!

இதனைத் தொடர்ந்து, நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஏழுமலையையும் தாக்கி, அவரிடமிருந்த செல்போன் மற்றும் பாதுகாப்பு இல்லத்தின் சாவியை பறித்துக் கொண்டனர். பின்னர், அந்த சாவியை பயன்படுத்தி முதன்மை நுழைவாயிலைத் திறந்து, மொத்தம் 12 பேர் அங்கிருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து வெளியேறிய அவர்கள், சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்ற மூன்று பேரை வழிமறித்து தாக்கியதாகவும், அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தகவலின்படி, தப்பியோடிய 12 பேரில் ஆறு பேர் காஞ்சிபுரம் நோக்கியும், மற்ற ஆறு பேர் செங்கல்பட்டு நோக்கியும் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தாக்குதலில் காயமடைந்த காவலர் மற்றும் பாதுகாப்பு இல்ல ஊழியர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தப்பியோடிய 12 பேரை பிடிக்க செங்கல்பட்டு தாலுகா போலீசார் பல தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடி, தேசிய நெடுஞ்சாலை, பைபாஸ் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிர வாகன சோதனைகளும் கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்க  இனி அருவிகளில் குளிக்க ஆன்லைன் பேமெண்ட்… வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

இந்த நிலையில், தப்பியோடிய 12 பேரில் ஒருவரை சென்னை கே.கே. நகரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 11 பேரை விரைவில் கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆத்தூர் அரசினர் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago