எம்.எஸ். தோனிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளை சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் முற்றிலும் மறுத்துள்ளார். தோனி அணியின் பங்குகளைக் கேட்டதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 25 சதவீத பங்குகளைக் கேட்கத் தொடங்கியதாகவும், பின்னர் அதை 20 சதவீதமாகவும், 18 சதவீதமாகவும் குறைத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அணி நிர்வாகம் தரப்பில் 3 முதல் 5.5 சதவீதம் வரையிலான பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் வதந்திகள் பரவின.
இந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், தோனி பங்குகளைக் கேட்டதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் அடிப்படையற்றவை என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும், தோனி தான் இனி விளையாடப் போவதில்லை என்றும் இதுவரை தங்களிடம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த பின்னரும், ரசிகர்களுக்காக ஓரிரு போட்டிகளில் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எந்தப் போட்டியிலும் விளையாடாததால், ஓய்வு அறிவித்துவிட்டு அணியின் ஆலோசகர் அல்லது பயிற்சியாளர் போன்ற புதிய பொறுப்புகளில் தொடரலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, சிஎஸ்கே அணியின் பங்குகளை தோனி கேட்டதாகவும், அவர் எதிர்பார்த்ததைவிட குறைவான பங்குகளை மட்டுமே நிர்வாகம் வழங்க முன்வந்ததால், அணி தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் அவர் பங்கேற்காமல் ஒதுங்கிவிட்டதாகவும் செய்திகள் பரவின. இந்தச் சூழலில் தோனியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
தோனி குறித்து வெளியான இந்த வதந்திகளுக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், “இந்தத் தகவல்கள் முற்றிலும் அடிப்படையற்றவை. தான் இனி விளையாடப் போவதில்லை என்று தோனி இதுவரை எங்களிடம் கூறவில்லை. எனவே, பொறுத்திருந்து பார்ப்போம். தற்போதுவரை தோனியுடன் இதுகுறித்து நாங்கள் எதையும் விவாதிக்கவில்லை. அவர் தனது முடிவுகளைத் தனிப்பட்ட முறையில் எடுப்பார். அதற்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் நீண்டகால தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தோனியின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அவர் தொடர்ந்து வீரராக களமிறங்குவாரா அல்லது அணியின் ஆலோசகர், பயிற்சியாளர் உள்ளிட்ட புதிய பொறுப்பை ஏற்பாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா அல்லது வேறு பொறுப்பில் தொடர்வாரா என்பது அவரது முடிவுக்குப் பிறகே தெரியவரும். தற்போதைய நிலையில், தோனிக்கும் சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் இடையே பங்கு விவகாரம் காரணமாக எந்தவிதமான விரிசலும் இல்லை என்பதை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனின் விளக்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
