Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

கேரளாவின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டிலிருந்து கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

குறிப்பாக, மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டின்போது, கேரள முதலமைச்சர் திரு. சதீசன், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கட்டுப்பாடுகளில் கேரளாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜயிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு கேரளாவை இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்ததாகவும் கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது உண்மையா? கேரளாவில் மலைகள் இல்லையா? அங்கு கல், பாறை மற்றும் கட்டுமானத் தேவைக்கான கனிம வளங்கள் இல்லையா? கேரளாவின் வளர்ச்சிக்காகத் தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் ஏன் அழிக்க வேண்டும்?

Republic Tamil

தமிழ்நாட்டின் கனிம வளம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கையால் உருவாக்கப்பட்ட அரிய வளமாகும். ஒருமுறை மலைகளையும் பாறைகளையும் அகழ்ந்து எடுத்துவிட்டால், அவை மீண்டும் உருவாகப் போவதில்லை.

இதையும் படியுங்க  செல்வாக்கும், புகழும் கூடியிருக்குமே..! பாஜக பீதியால் பொன்னான வாய்ப்பை தவறவிட்ட விஜய்..!?

ஒரு குவாரியில் இருந்து கல் மட்டும் வெளியேறுவதில்லை. ஒரு மலையின் இயற்கைச் சமநிலை சிதைக்கப்படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. நிலத்தடி நீரின் நிலை மாறுகிறது. விவசாயம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் சீர்குலைகிறது. இறுதியில், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிறது.

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டிற்குள்ளேயே சாலை, பாலம், வீடமைப்பு, தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகளுக்கான கட்டுமான மூலப்பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நமது தேவையை முழுமையாக உறுதி செய்யாமல், பிற மாநிலங்களின் கட்டுமானத் தேவைக்காக தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வத்தை அனுப்புவது எந்த வகையிலும் தொலைநோக்கான நிர்வாகமாக இருக்க முடியாது.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், நல்லுறவு என்ற பெயரில் தமிழ்நாட்டின் மலைகளை இழக்க முடியாது.

கேரளமாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், ஆந்திரமாக இருந்தாலும், எந்த மாநிலத்தின் கட்டுமானத் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையை அழிப்பதை ஏற்க முடியாது.

எனவே, கேரளாவுக்கு தனிப்பட்ட விலக்கு அளிப்பது குறித்த பரிசீலனையை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

இதையும் படியுங்க  "கேரளாவில் பூமிக்கு அடியில் இருக்கும் 'மர்ம உலகம்'.. புது வீட்டு அடியில் கிலோமீட்டர் கணக்கில் ரகசிய குகை! 

தமிழ்நாட்டின் உள்நாட்டுத் தேவையை முதலில் முழுமையாகக் கணக்கில் கொண்டு, இயற்கை வளத்தின் இருப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் தேவைகளை உறுதி செய்த பின்னரே கனிம வளப் பயன்பாடு தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்பட வேண்டும்.

வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதில் விதிவிலக்குகளுக்கு இடமளிக்காமல், சட்டவிரோதக் குவாரிகள், அதிகப்படியான அகழ்வுகள் மற்றும் கனிம வளக் கடத்தலை முற்றாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

தி. வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago