திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமணத்தில், பிராமணர்கள் வேத மந்திரங்கள் ஓத சடங்குகள் நடைபெற்ற சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. “இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக் கூடாது; உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதிரடி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
நவம்பர் 4 அன்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில், மு.க.ஸ்டாலினும் கி.வீரமணியும் நேருக்கு நேர் சந்தித்து இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.
சந்திப்பின் போது ஸ்டாலின் தனது சூழலை வீரமணியிடம் விளக்கியதாகக் கூறப்படுகிறது. “ஒரு மாவட்டச் செயலாளரோ அல்லது துணைப் பொதுச்செயலாளரோ இந்தச் சர்ச்சையில் சிக்கியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால், கட்சியின் உச்சபட்ச பதவியான பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் மீது அவசரப்பட்டு உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கழக விதிகள் இடம் கொடுக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்
துரைமுருகன் மீது உடனடி நடவடிக்கை இல்லை என்றாலும், அவரை மாற்ற திமுக தலைமை ஒரு நுட்பமான திட்டத்தை வைத்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது திமுக 110 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றியம் மற்றும் நகர அளவிலான மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் கிளைக் கழகத் தேர்தல் தொடங்கி, இறுதியாகத் தலைமைக்கழக உட்கட்சித் தேர்தல் வரவுள்ளது.
துரைமுருகன் தற்போது வயோதிகத்தில் இருப்பதால், அந்தத் தலைமைக்கழகத் தேர்தலின் போது அவருக்குப் பதிலாக அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒருவரைப் புதிய பொதுச்செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
துரைமுருகன் விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ஆனால், விரைவில் வரவிருக்கும் திமுக உட்கட்சித் தேர்தல் மூலமாகப் பொதுச்செயலாளர் பதவியில் புது முகம் களமிறக்கப்படுவது உறுதி என்கிறார்கள்.
