https://republictn.com/

வடசென்னை தொகுதி திமுக எம்.பி, கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் போலீசார் நில மோசடி, பண மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பிரம்மாண்ட திருமணம் நடந்து முடிந்த இரண்டே நாட்களில் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புக்கரசு என்பவர் கடந்த 2024-ஆம் ஆண்டே இந்த மோசடி தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்திருந்தார். அந்த புகாரில் கலாநிதி வீராசாமி எம்பியின் மகன் சித்தார்த் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சென்னை அண்ணா சாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலத்திற்கான அசல் பத்திரங்களை வங்கியிலிருந்து கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அன்புக்கரசிடமிருந்து சித்தார்த் வாங்கியுள்ளார்.

ஆனால், பத்திரத்தை வாங்கிக் கொண்ட சித்தார்த், கூறியபடி வங்கியிலிருந்து கடனும் பெற்றுத் தரவில்லை. வாங்கிய நிலப் பத்திரங்களையும் திருப்பித் தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் இந்த புகார் மீது எந்தவித விசாரணையும் தீவிரமாக நடைபெறாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த விவகாரத்தில் சித்தார்த்துக்கு உறுதுணையாகச் செயல்பட்டதாகக் கூறி மேலும் சிலர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது.

எம்பி கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் , திமுக கவுன்சிலர், ராணி, எம்பி கலாநிதி வீராசாமியின் உதவியாளர் ஆசைத்தம்பி, நாராயணன் ஆகிய நான்கு பேர் மீது அண்ணாநகர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 17-ஆம் தேதிதான் சித்தார்த்துக்கு சென்னையில் உள்ள மதுரவாயல் சீவாரு திருமண மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். திருமணம் முடிந்து இரண்டே நாட்கள் ஆன நிலையில், அண்ணாநகர் போலீசார் இந்த மோசடி வழக்கை முறைப்படி பதிவு செய்து, தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago