https://republictn.com/

தேர்தல் ரிசல்ட் வெளியான பிறகு, அ.தி.மு.க-வில், எடப்பாடி பழனிசாமிக்கும், சி.வி.சண்முக, எஸ்.பி.வேலுமணி தரப்புக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் உக்கிரமாக வெடித்துள்ளது.

இது குறித்துப் பேசிய சி.வி.சண்முகம், ”தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் என்னிடம் ரகசியமாகப் பேசினர். அப்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்பது புரியவில்லை. அவர்கள் என்னிடம் பேசியதன் மர்மம் மறுநாள் எடப்பாடி பழனிசாமி பேசியபோதுதான் புரிந்தது. தி.மு.க-வின் வெளி ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்கலாம் என்ற திட்டத்தை எடப்பாடி முன்வைத்தார். அந்த அமைச்சர்கள் யாரென்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல மாட்டேன்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

போலி கடிதப் புகார்
எடப்பாடி பழனிசாமி தனக்கு 47 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆளுநரிடம் அளித்ததாகச் சொல்லப்படும் கடிதம் ஒரு ‘போலி’ எனச் சண்முகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “அந்தப் புகைப்படம் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது அல்ல. எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தைப் பெற்று அவர் கொடுத்த கடிதம் அதிகாரப்பூர்வமானது கிடையாது” என்று அவர் கூறியுள்ளார்.

புதிய அதிகார மையம்
கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கூடி முக்கிய முடிவுகளை எடுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியும், கொறடாவாக விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாகச் சண்முகம் அறிவித்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.

த.வெ.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு மேற்கொண்ட சில காய நகர்த்தல்கள், கட்சியின் அடிப்படைத் தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் தி.மு.க-வுடன் கைகோர்க்கும் முயற்சியை சி.வி.சண்முகம் போன்றோர் கடுமையாக எதிர்ப்பதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago