அதிமுகவில் வெடித்துள்ள கிளர்ச்சி எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில், 30 அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டது. அதில் எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சி. விஜயபாஸ்கரை கட்சியின் கொறடாவாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு, நேற்று காலை எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் தற்காலிக சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தனர். அவரை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் தற்போது, 47 அதிமுக எம்எல்ஏக்களில் 30 பேர் வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, கட்சிக்குள் அதிகாரப் போட்டி வெளிப்படையாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. சி.வி. சண்முகத்துடன், நத்தம் விசுவநாதன், கே.சி. வீரமணி, காமராஜ், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாறியுள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி அதிருப்தி, தற்போது சட்டமன்ற குழுத் தலைவர் தேர்வை மையமாகக் கொண்டு வெளிப்படையான அணிப் பிரிவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், தி.மு.க-அ.தி.மு.க கூட்டணி பற்றி இ.பி.எஸ் எங்களிடம் பேசினார். தி.மு.கவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. தி.மு.க ஆதரவோடு முதலமைச்சராக இ.பி.எஸ் முயன்றார். இ.பி.எஸ் கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானோம். தி.மு.கவுடன் இணையக்கூடாது என்றோம்; அதை இ.பி.எஸ் ஏற்கவில்லை. அதன் பின்னரே பெரும்பான்மை அ.தி.மு.க எம்எல்ஏக்களை கூட்டி தீர்மானம் இயற்றினோம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை இபிஎஸுக்கு எதிராக முன்வைத்து, எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளார் சி.வி.சண்முகம்.
இத்தோடு விடக்கூடாது என்பது போல் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்கியடிக்கவும் சி.வி.சண்முகம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான வேலையில் இறங்கியுள்ள சி.வி.சண்முகம், அதிமுகவில் தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் ரகசியமாக கையெழுத்து பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டால் ஓபிஎஸுக்கு நேர்ந்த அதேகதி தான் இபிஎஸுக்கும் ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஏனெனில் 2022ம் ஆண்டு இதேபோல் ஒரு பொதுக்குழுவை கூட்டித்தான் அதிமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதோடு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி கடந்த 11 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமியால் தான் தோல்வியுற்றதாக கூறி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸை வெளியேற்ற சி.வி.சண்முகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இரண்டாவது நம்பி இணைந்த ஓபிஎஸை கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத கொடுமையாக கட்சியை விட்டு வெளியேற்றினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் அரசியலில் செல்வாக்கு இழந்த ஓபிஎஸ் வேறு வழியின்றி திமுகவில் தஞ்சமடைந்துள்ளார். அப்போது ஓபிஎஸ் விட்ட சாபம் தான் இன்று எடப்பாடி பழனிசாமியை விரட்டி விரட்டி அடிப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
