https://republictn.com/

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி, இறுதி நேரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து வந்து இணைந்த பல புதிய முகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர்களில் சிலர் வெற்றியும், சிலர் தோல்வியும் அடைந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது தவெக-வுக்குள் மாவட்ட செயலாளர்களுக்கும், புதிதாக வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே புதிய அதிகாரப் போட்டி, கருத்து வேறுபாடுகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

எம்.எல்.ஏ-க்களின் புதிய டிமாண்ட்
தேர்தல் நேரத்தில் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தவெக-வில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் தற்பொழுது தங்களுக்குக் கட்சியிலும் அதிகாரமிக்க “மாவட்ட செயலாளர்” பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இவர்களின் இந்த கோரிக்கைக்குத் தவெக தலைமையோ தற்பொழுது சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தலைமையின் அதிரடி முடிவு
எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள சில தொகுதிகளைப் பிரித்து, புதிதாகக் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ ஆனவர்களுக்கு வழங்கத் தவெக தலைமை முடிவெடுத்துள்ளது. அண்மையில் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முக்கிய முடிவைக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் படி, தேர்தலில் போட்டியிடாதவர்கள் அல்லது இரண்டு முதல் மூன்று தொகுதிகளைக் கவனித்து வரும் மாவட்ட செயலாளர்களின் பொறுப்பில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் பிரிக்கப்பட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன .

உழைத்தவர்களின் அதிருப்தி
தலைமையின் இந்த புதிய முடிவிற்கு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், தேர்தலில் வெற்றி பெறாத மாவட்ட செயலாளர்கள், கட்சியின் பழைய நிர்வாகிகள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

“மக்கள் இயக்கக் காலத்திலிருந்தே விஜய்க்காகப் பணியாற்றியவர்கள், கட்சி தொடங்கிய காலத்திலிருந்து போஸ்டர் ஒட்டியவர்கள் என உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டுமே கட்சிப் பதவி” என்று மேடைக்கு மேடை பேசிவிட்டு, தற்பொழுது தவெக தலைமை தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகப் பழைய நிர்வாகிகள் குமுறுகின்றனர். தாங்கள் பார்த்து வந்த தொகுதிகளைப் புதியவர்களிடம் பிரித்துக் கொடுப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு?
இந்தத் தொகுதிப் பகிர்வு மற்றும் அதிகாரப் போட்டி காரணமாக, குறிப்பாகத் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தவெக மாவட்ட செயலாளர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான உட்கட்சிக் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலேயே, உழைத்தவர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் இடையே தவெக-வில் வெடித்துள்ள இந்த அதிகார மோதலைத் தலைமை எவ்வாறு கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 hour ago at 1 hour ago