https://republictn.com/

மங்கோலியாவில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு பேரா டேக்வாண்டோ வீரர் பிளஸ்சிங் சஜு: “அரசு தொடர்ந்து ஆதரவு அளித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்வேன்”

மங்கோலியாவின் உலான் பாத்தர் நகரில் மே 25ஆம் தேதி நடைபெற்ற 11வது ஆசிய பேரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேரா டேக்வாண்டோ வீரர் பிளஸ்சிங் சஜு, K41 பிரிவு (63 கிலோ எடைப்பிரிவு) போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 10 வீரர்கள் பங்கேற்ற நிலையில், இந்திய அணி மொத்தமாக இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சிறப்பான சாதனையைப் படைத்துள்ளது.

தனது வெற்றி குறித்து பேசிய பிளஸ்சிங் சஜு, “இந்த தங்கப் பதக்கம் எனது தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல; இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பெருமை. இந்த சாதனைக்கு ஆதரவாக இருந்த இந்திய டேக்வாண்டோ சங்கம், தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம், எங்கள் செயலாளர் திரு. சித்தேஸ்வரன், பயிற்சியாளர்கள் மற்றும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

டேக்வாண்டோ என்பது ஒலிம்பிக் மற்றும் பேரா ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் முக்கிய விளையாட்டாகும். இதில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இரண்டு கைகளும் முழங்கைக்குக் கீழே இல்லாத மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான K41 பிரிவில் பிளஸ்சிங் சஜு போட்டியிடுகிறார். இந்த விளையாட்டில் கால்களின் திறமையே முக்கிய பங்காற்றுகிறது.

தனது வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பைப் பற்றி கூறிய அவர், “கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்தப் போட்டி மிகவும் சவாலானதாக இருந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமையான வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இருப்பினும், விடாமுயற்சியும் கடின உழைப்பும் என்னை இந்த வெற்றிக்குக் கொண்டு வந்தது” என்று தெரிவித்தார்.

மேலும், எதிர்கால இலக்குகள் குறித்து பேசிய அவர், “இன்னும் பல சர்வதேச போட்டிகள் வரவிருக்கின்றன. தமிழ்நாடு அரசும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தொடர்ந்து ஆதரவு அளித்தால், மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பேன்” என்றார்.

அரசாங்கத்திடம் தனது கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். “நான் ஏற்கனவே இரண்டு ஆசிய அளவிலான பதக்கங்களை வென்றுள்ளேன். எனக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும், எனக்கு தனியாகப் பயணம் செய்ய முடியாததால், என்னுடன் செல்லும் உதவியாளருக்கும் (Escort) அரசு நிதியுதவி வழங்கினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் செயலாளர் திரு. சித்தேஸ்வரன் கூறுகையில், “இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய சாதனை கிடைத்துள்ளது. பேரா டேக்வாண்டோ பிரிவில் பிளஸ்சிங் சஜு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் ஆசிய பூம்சே சாம்பியன்ஷிப்பில் மற்றொரு தமிழ்நாட்டு வீரர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது தமிழ்நாடு டேக்வாண்டோ வரலாற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி வழங்கி வருகிறது.

அந்த ஆதரவின் பலனாகவே இன்று தமிழக வீரர்கள் ஆசிய அளவில் பதக்கங்களை வென்று வருகின்றனர். இருப்பினும், மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு உதவியாளர்கள் அவசியம். வீரர்களுக்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்கிறது.

ஆனால் அவர்களுடன் பயணம் செய்யும் உதவியாளர்களுக்கான செலவினங்களுக்கு தற்போது ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நிதியுதவியையும் அரசு வழங்கினால், மேலும் பல மாற்றுத் திறனாளி வீரர்கள் சர்வதேச அரங்கில் சாதனை படைக்க முடியும்” என்றார்.

மங்கோலியாவில் நடைபெற்ற இந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் கிடைத்த தங்கப் பதக்கம், பிளஸ்சிங் சஜுவின் விடாமுயற்சிக்கும், தமிழ்நாட்டின் விளையாட்டு வளர்ச்சிக்கும் சான்றாக அமைந்துள்ளது. உரிய ஆதரவும் வாய்ப்புகளும் கிடைத்தால், எதிர்காலத்தில் உலக அரங்கிலும் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பறக்கவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் தனது பயணத்தை அவர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 minutes ago at 50 minutes ago