TVK

ஒரு மாவட்டத்தையே ஆளும் ஆட்சியர்…ஒரு மாவட்டத்தின் முதல் குடிமகள்…அவருக்கே இன்று தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால், இது எவ்வளவு பெரிய அவமானம்?

கள்ளக்குறிச்சியில் வெடித்திருப்பது சாதாரண சர்ச்சை அல்ல. தமிழ்நாட்டின் மானத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கும் பூகம்பம்!

1. நடந்தது என்ன? கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தகாத முறையில் மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க… உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்… எப்போது பார்க்கலாம்…” – இப்படி ஒரு மெசேஜ் ஒரு மக்கள் பிரதிநிதியிடம் இருந்து ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு போனதாக எதிர்கட்சியினர் சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது 

அதோடு நிற்கவில்லை. இரவு நேரத்தில் மதுபோதையில் ஆட்சியரின் வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 

இது உண்மையென்றால், இது கேவலத்தின் உச்சம் , பதவியை வைத்து ஒரு பெண் அதிகாரியை மிரட்டுவதா? இதைவிட கீழ்த்தரம் வேறு என்ன இருக்க முடியும்?

2. ஆட்சியருக்கே தனி காவலர்… இதைவிட அவமானம் உண்டா?

இந்த குற்றச்சாட்டு வெளியானதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், ஆட்சியரின் பாதுகாப்புக்காக தனி காவலர் நியமிக்கப்பட்டிருக்கிறார் 

யோசித்துப் பாருங்கள் , லட்சக்கணக்கான மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஆட்சியருக்கு, இன்று தன்னை பாதுகாக்க ஒரு காவலர் தேவைப்படுகிறார், இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது  தமிழ்நாடு வரலாற்றில் இதுதான் முதல் முறை 

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அதிகாரியே, சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்படும் ஒரு எம்.எல்.ஏ-விடம் இருந்து தப்பிக்க காவலரை நம்பியிருக்கிறார் என்றால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறது?

இதையும் படியுங்க  ஒரே மேடையில் விஜய் - சங்கீதா..? தீயாய் பரவும் தகவல்!

இது வெறும் பாதுகாப்பு ஏற்பாடு அல்ல. இது தமிழ்நாட்டு அரசியலுக்கு விழுந்த செருப்படி..

திமுக எம்பி கனிமொழி கேட்ட கேள்வி – ஒவ்வொரு தமிழனின் கேள்வி ? இந்த விவகாரம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர்  கனிமொழி எம்பி எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு, தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது.

“மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் விஜய் அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?” என கேட்டிருக்கிறார் இது கனிமொழியின் கேள்வி மட்டும் அல்ல. கள்ளக்குறிச்சியில் இருக்கும் ஒவ்வொரு தாயின் கேள்வி. ஒவ்வொரு மகளின் கேள்வி. ஒவ்வொரு பெண் அதிகாரியின் கேள்வி 

மேலும் “தீபாவளி நாட்களில் மட்டும் தமிழ்நாட்டில் 13 -க்கும் மேற்பட்ட கொலைகள்”  விழுந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டு கிடக்கிறது என்பதற்கு சாட்சி.

முதல்வர் விஜய் அவர்களே, இனியும் மௌனம் காப்பது அழகல்ல  நீங்கள் பேசும் “பெண்கள் பாதுகாப்பு” வெறும் மேடை வசனமா? இல்லை உண்மையான கொள்கையா?

ஒரு பெண் ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண கிராமத்து பெண்ணின் நிலை என்ன? அவர்கள் யாரிடம் போய் புகார் கொடுப்பார்கள் ? எம்.எல்.ஏ-விடமா? அந்த எம்.எல்.ஏ-வே இப்படி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு வந்தால், அவர்களுக்கு யார் நீதி?

இதையும் படியுங்க  "₹1.11 லட்சம் கோடி ஊழலை உலுக்கிய நேர்மை!  முன்னாள் சகாயம் IAS-க்கு மீண்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு - உயர் நீதிமன்றம் அதிரடி!"

1. உடனடி விசாரணை வேண்டும்: இந்த ஆபாச மெசேஜ்?‌ குற்றச்சாட்டு குறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மெசேஜின் ஆதாரம், ஆட்சியரின் புகார், காவல்துறை நடவடிக்கை அனைத்தும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.

2. கட்சியில் இருந்து உடனடி நீக்கம்: விசாரணை முடியும் வரை காத்திருக்காமல், குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும்.

3. எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம்: குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பெண்களை இழிவுபடுத்துபவர்களுக்கு சட்டமன்றத்தில் இடமில்லை என்பதை இந்த அரசு நிரூபிக்க வேண்டும்.

4. பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: ஒரு காவலரை நியமித்துவிட்டு கடமை முடிந்தது என்று நினைக்கக் கூடாது. பெண் அதிகாரிகள் பயமின்றி பணி செய்யும் சூழலை அரசு உருவாக்க வேண்டும்.

ஒரு பக்கம்: “ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்ணின் நிலை என்ன? உடனடியாக எம்.எல்.ஏ-வை தகுதி நீக்கம் செய்யணும்!” கேள்வி எழுப்பி வருகின்றனர் இன்னொரு பக்கம்: “இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்படும் குற்றச்சாட்டா? ஆதாரம் எங்கே? ஆட்சியர் தரப்பில் அதிகாரப்பூர்வ புகார் வந்துச்சா?” எனவும் எதிர்வினை ஆற்றுகிறார்கள்,

இதையும் படியுங்க  விஜய் எடுக்கும் முக்கிய முடிவு..! எடப்பாடியின் திடீர் மூவ்..! சூடுபிடிக்கும் அரசியல்களம்..!

த.வெ.க – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது ”இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். ஒரு மாவட்டத்தின் உயர் அதிகாரி வீட்டிற்கு சென்று பிரச்னை செய்ததாக கூறுவதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அவ்வாறு தான் செய்ய முடியுமா? கலெக்டருக்கு நான் எதற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும்? நான் தவறான கண்ணோட்டத்தில் எந்த மெசேஜுன் அனுப்பவில்லை. ஒரு மாவட்டத்தின் உயர் பதவியில் இருப்பவரிடம், எப்படி அவ்வாறு நடந்து கொள்ள முடியும். இது முழுக்க முழுக்க, தி.மு.க- ஐ.டி விங் பரப்பும் பொய்யான தகவல். திமுக மற்றவர்கள் மீது பழிபோட பெண் விவகாரத்தையும். போதை குற்றச்சாட்டையும் கையில் எடுக்கும். அப்படி ஒன்று தான் என் மீதான குற்றச்சாட்டும்” என்கிறார். 

உண்மை எது என்பதை, ஆட்சியரின் அதிகாரப்பூர்வ புகார், காவல்துறை விசாரணை, மெசேஜின் ஆதாரம்தான் முடிவு செய்யும். அதுவரைக்கும், நீர் பூத்த நெருப்பாகதான் இருக்கும்.இது திமுக vs தவெக பிரச்சினை அல்ல. இது ஆண் vs பெண் பிரச்சினை அல்ல. இது அதிகாரம் vs மானம் பிரச்சினை.

பதவியை வைத்து ஒரு பெண்ணை தொந்தரவு செய்யலாம் என்று நினைக்கும் எவனாக இருந்தாலும், அவன் எந்தக் கட்சியாக இருந்தாலும், அவனுக்கு அரசியலில் இடமில்லை! ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்ணுக்கு யார் பாதுகாப்பு?

விஜய் அவர்களே, பதில் சொல்லுங்கள். நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால், வரலாறு உங்களை மன்னிக்காது.!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *