ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யு. சகாயத்திற்கு, கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் சாட்சியம் அளிக்க நீதிமன்றங்களுக்குச் செல்லும் போது, குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 27, 2026) உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராக யு. சகாயம் பணியாற்றிய காலத்தில், மாவட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்பட்ட கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அவரை சட்ட ஆணையராக நியமித்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொண்ட அவர், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு சுமார் ₹1.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. அந்த வழக்குகளில் முக்கிய சாட்சியாக யு. சகாயம் சேர்க்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 2023ஆம் ஆண்டு அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, கிரானைட் முறைகேடு வழக்குகளில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, கிரானைட் மாஃபியாக்களிடமிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சகாயம் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
மேலும், தனக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கக் கோரி 2025ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தமிழக அரசிடம் விண்ணப்பித்ததாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் 2025ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு WP (Crl) No.1296 of 2025 – யு. சகாயம் எதிர் தமிழ்நாடு அரசு மற்றும் பிறர் என்ற வழக்காக நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால், கிரானைட் முறைகேடு வழக்குகளில் சாட்சியம் அளிக்கச் செல்லும்போது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், மீண்டும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், பாதுகாப்பு வழங்கக் கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம் தற்போது பாதுகாப்பு மறுஆய்வுக் குழுவின் (Review Committee) பரிசீலனையில் உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகளில் யு. சகாயத்தின் சாட்சியம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார். மேலும், அவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும், குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய காவலருடன் கூடிய போலீஸ் பாதுகாப்பை தமிழ்நாடு டிஜிபி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அத்துடன், யு. சகாயம் அளித்துள்ள பாதுகாப்பு கோரும் மனுவை பாதுகாப்பு மறுஆய்வுக் குழு விரைந்து பரிசீலித்து, நிரந்தர பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சட்டப்படி உரிய உத்தரவை பிறப்பிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
கிரானைட் முறைகேடு தொடர்பான முக்கிய வழக்குகளில் சாட்சியமளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி யு. சகாயத்திற்கு, அச்சமின்றி நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சாட்சியத்தை பதிவு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
