Pappaiya

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே சாலையில் தவறவிடப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பணத்தை எவ்வித சுயநலமும் இன்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவருக்குப் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், அரியப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (68) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தங்க நகைகள் மற்றும் பணம் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆரியங்காவூர் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அவர் வைத்திருந்த பை தவறுதலாகச் சாலையில் விழுந்துள்ளது. அதில் சுமார் 245 கிராம் எடையுள்ள 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 ரொக்கம் இருந்துள்ளன.

வீட்டிற்குச் சென்ற பிறகுதான் பை காணாமல் போனதை அறிந்த சுப்பிரமணியன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கிடையே, அந்த வழியாக வந்த மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பையா (76) என்ற முதியவர் சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் அதிக மதிப்புள்ள தங்க நகைகளும் பணமும் இருப்பதை அறிந்த அவர், எவ்வித ஆசைக்கும் இடமளிக்காமல் உடனடியாகப் பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்று அவற்றை ஒப்படைத்துள்ளார்.

இதையும் படியுங்க  குட்நியூஸ்... தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.. குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள் அரசு ஊழியர்கள்!

இதனைத் தொடர்ந்து, பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி விசாரணை மேற்கொண்டு, பையில் இருந்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் நகையைத் தவறவிட்ட சுப்பிரமணியனை அடையாளம் கண்டு காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து, முதியவர் பாப்பையாவின் முன்னிலையில், 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 பணம் ஆகியவை உரியவரான சுப்பிரமணியனிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.

Pappaiya

தனது மதிப்புமிக்க நகைகளும் பணமும் எவ்விதக் குறையும் இன்றி மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த சுப்பிரமணியன், பாப்பையாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவ்வளவு மதிப்புள்ள பொருட்களைக் கண்டெடுத்தும், அவற்றைத் தன்வசம் வைத்துக்கொள்ளாமல் நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த பாப்பையாவின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

பாப்பையாவின் நேர்மையையும் சமூகப் பொறுப்புணர்வையும் பாராட்டிய பாவூர்சத்திரம் காவல்துறையினர், அவருக்குச் சால்வை அணிவித்து, வாழ்த்து அட்டை வழங்கிக் கௌரவித்தனர். காவல் ஆய்வாளர் வேல்கனி உள்ளிட்ட காவல்துறையினரும் பொதுமக்களும் அவரைப் பாராட்டினர்.

இன்றைய காலகட்டத்தில், சாலையில் கிடைக்கும் சிறிய தொகையைக்கூடத் தனதாக்கிக்கொள்ள நினைப்பவர்கள் மத்தியில், 76 வயதான பாப்பையா இவ்வளவு பெரிய மதிப்புள்ள நகைகளையும் பணத்தையும் நேர்மையுடன் உரியவரிடம் சேர்க்க உதவியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அவரது இந்தச் செயல் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டு, நேர்மைக்கும் மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாகப் பாராட்டப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  "₹10,800 கோடி மிச்சம்! கடன் பட்டியலில் 2-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு சரிந்த தமிழ்நாடு - பின்னணி என்ன?"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *