Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

David

சேலம்  நகரத்தின் நிழல் உலக வரலாற்றில் மீண்டும் ஒரு ரத்த அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. நேற்று (அக்.27) காலை 11 மணி. சேலம் ஜங்சன் புதுரோடு மேம்பாலம். வாகனங்கள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்த அந்தப் பரபரப்பான சாலையில், ஒருவன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் செத்துக்கிடந்தான். வெட்டியவர்கள் 7 பேர். வெட்டுப்பட்டு இறந்தவன் பெயர் “டேவிட் என்ற உதயகுமார்” என்ற ரவுடி  

இது சாதாரண கொலை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஒரு கொடூரக் கொலைக்கு, திட்டமிட்டு நடத்தப்பட்ட பழிக்குப் பழி!

யார் இந்த டேவிட்? சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார், போலீஸ் ரெக்கார்டில் பிரபல ரவுடி. பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வேடம்… இரவில் நிழல் உலக தாதா. இவன் மீது கொலை, நில மோசடி, வழிப்பறி உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவன் மீது மீண்டும் ஒரு நில மோசடி வழக்கு பதிவானது. போலீஸ் தேடிவந்த நிலையில், நிபந்தனை முன்ஜாமீன் பெற்றான். அதன்படி, அழகாபுரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போட்டுவந்தான்.

எமனும் கையெழுத்துக்காகக் காத்திருந்தான் என்பது அவனுக்குத் தெரியவில்லை!

நடந்தது என்ன? அக்டோபர் 27-ம் தேதி காலை, வழக்கம்போல் கையெழுத்துப் போட்டுவிட்டு, நண்பர் பைசலுடன் ஸ்கூட்டரில் ஜங்சன் – தாரமங்கலம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தான் டேவிட். எதிரே வந்த 5 பேர் கும்பல், திடீரென அவனைச் சுற்றிவளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள்கள் சுழன்றன.

உயிர் பிழைக்க ஓடினான் டேவிட். ஆனால், கும்பல் ஓட ஓட விரட்டி, கழுத்து, தலை என சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானான். கொலையாளிகள் தாங்கள் வந்த பைக்குகளை அங்கேயே வீசிவிட்டு, காட்டுப் பகுதி வழியாகத் தப்பினர்.

இதையும் படியுங்க  But as soon as you move into the $40–$300 range

தகவலறிந்து விரைந்த மாநகர துணை கமிஷனர் பாஸ்கர் தலைமையிலான சூரமங்கலம் போலீஸார், உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சரணடைந்த 7 பேர்… வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்! இந்தக் கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம், வீராணம் பகுதிகளைச் சேர்ந்த கோவிந்தன் (23), காத்தாயன் என்ற கார்த்தி (23), கருவாடு ரகு (25), கீரி மணிகண்டன் (27), மோகன் (25), சுலைமான் (24), பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த அருண் (25) ஆகிய 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேலத்தையே உலுக்கிய பழைய சம்பவத்தின் தொடர்ச்சி வெளிச்சத்துக்கு வந்தது.

பின்னணி: ரத்தத்தில் எழுதப்பட்ட சேலம் சரித்திரம்! இது ஒற்றைக் கொலையின் பழிவாங்கல் அல்ல. சேலத்தின் நிழல் உலகில் ஆண்டாண்டு காலமாக ஓடிக்கொண்டிருக்கும் ரத்த ஆற்றின் தொடர்ச்சி!

முதலில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டார். அதற்குப் பழிவாங்கும் வகையில் நெப்போலியன் படுகொலை செய்யப்பட்டார். நெப்போலியன் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் பிரபல ரவுடி செல்லதுரை, கிச்சிப்பாளையம் பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். செல்லதுரை கொலைக்குப் பழிவாங்கும் வகையில் ரவுடி ஜான் கொலை செய்யப்பட்டார். இப்போது ஜான் கொலைக்குப் பழிவாங்கும்வகையில் டேவிட் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கிறார்!

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (35), கடந்த 2024, மார்ச் 19-ம் தேதி, ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, காரை வழிமறித்த கும்பலால் காருக்குள்ளேயே வைத்து கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

அப்போது, இது செல்லதுரை கொலைக்குப் பழிக்குப் பழி என்று கூறப்பட்டது. சித்தோடு போலீஸார் 4 பேரைப் பிடித்தனர், 3 பேரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். முக்கியக் குற்றவாளி ஜீவகன் உட்பட 4 பேர் சரணடைந்தனர்.

இதையும் படியுங்க  300 '5-Star' ஹோட்டல்களை ஏமாற்றிய 69 வயது ஜான்.. அவமானத்தை வென்றேடுக்க தில்லாலங்கடி.. டிப்-டாப் தமிழரின் பகீர் கதை..!

ஜான் கொலை வழக்கு இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, மோகன்ராஜ் என்பவர் வெளியிட்ட ஒரு வீடியோ புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதில், “ஜான் ஜெயிலில் இருந்தபோது, அவர் வீட்டில் கொள்ளையடிக்க ராகுல் என்பவருக்கு பாபு, சங்கர் திட்டம் போட்டுக் கொடுத்தனர். இதைச் சிறையில் ஜானிடம் ராகுல் போட்டு உடைக்க, ஜான் பாபுவையும் சங்கரையும் கொல்ல சிறையில் இருந்தே திட்டம் போட்டார். இதையறிந்த பாபுவும் சங்கரும் முந்திக்கொண்டு ஜானைத் தீர்த்துக்கட்டினர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஜான் கொலைக்கு மூலகாரணமே நேற்று கொலையான டேவிட்தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது! ஜானை கொலை செய்யத் திட்டமிட்ட கும்பலுக்கு டேவிட் பணம் கொடுத்து, பல்வேறு உதவிகள் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஜானின் ஆதரவாளர்கள், இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்து, நேற்று பழியைத் தீர்த்துள்ளதாகக் கூறுகின்றனர்.

சிறையில் இருந்து ‘ஸ்கெட்ச்’ போட்டது யார்? – அவிழாத மர்ம முடிச்சு! இங்குதான் மிக முக்கியமான மர்ம முடிச்சு உள்ளது. போலீஸ் தரப்பு கூறுகிறது: “சேலம் மத்திய சிறையில் உள்ள ஒரு பிரபல ரவுடியும் டேவிட்டைக் கொலை செய்ய ஜான் ஆதரவாளர்களுக்கு உதவியுள்ளார். அவரது திட்டப்படியே இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.” 

மேலும், ரவுடி செல்லதுரை கொலைச் சங்கிலியுடன் நேரடித் தொடர்புடையவன் வேலூர் ரவுடி வசூர் ராஜா. சேலம் – வேலூர் இரு மாவட்ட கூலிப்படை நெட்வொர்க்கையும் கையில் வைத்திருப்பவன். சிறைக்குள் இருந்துகொண்டே செல்போன் மூலம் ‘செட்டில்மெண்ட்’ செய்வதில் கில்லாடி. ஜான் கொலைக்கு டேவிட் உதவியதை அறிந்த ஜான் தரப்பினரின் கோபத்தை, தனது பழைய கணக்கைத் தீர்க்க சாதகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.

இதையும் படியுங்க  கள்ளக்காதல் ... சந்தேகப் புதைகுழி... கடத்தூரை உலுக்கிய ஒரு அடி ஆழக் கொலை!

யார் அந்த நபர்? நமது விசாரணையில் மூன்று கோணங்கள் தென்படுகின்றன:

1. ஜானுக்கு நெருக்கமான, தற்போது சேலம் சிறையில் உள்ள ஒரு மூத்த ரவுடி, ஜானின் மனைவிக்கு நீதி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில், வெளியே உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் ‘ஆர்டர்’ கொடுத்திருக்கலாம். சிறைக்குள் இருந்துகொண்டே வெளியே ‘செட்டில்மெண்ட்’ செய்வது சேலம் நிழல் உலகில் புதிதல்ல.

2. ஜான் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஜீவகன் கோஷ்டியாக இருக்குமோ? ஆனால், அவர்கள் டேவிட்டுக்கு உதவியவர்கள் என்பதால், அவனைக் கொல்லத் திட்டம் போட வாய்ப்பில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

3.டேவிட் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நில மோசடியில் பலரை ஏமாற்றியவன். சிறையில் உள்ள அவனது பழைய கூட்டாளி ஒருவன், ஜான் ஆதரவாளர்களின் கோபத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இரு தரப்பையும் மோதவிட்டு காரியம் சாதித்திருக்கலாம்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுவது: “சரணடைந்த 7 பேரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தால், சிறையில் இருந்து பேசிய அந்த ‘பெரிய தலை’ யார் என்பது தெரியவரும். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.”

ஒரு கொலை, இன்னொரு கொலைக்கு வித்திட்டு, இப்போது ஐந்தாவது கொலையில் முடிந்திருக்கிறது. சேலம் கிச்சிப்பாளையம், அம்மாபாளையம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ரவுடி கும்பல்களுக்கு இடையே கடுமையான ஆதிக்கப் போட்டியும், பழிக்குப் பழி வாங்கும் கொலைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

சேலம் நிழல் உலகின் இந்த ரத்தச் சுழற்சி இத்துடன் நிற்குமா? அல்லது டேவிட்டின் ஆதரவாளர்கள் அடுத்த பழிக்குக் காத்திருப்பார்களா? போலீஸ் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 hours ago at 9 hours ago