தருமபுரி மாவட்டம் கடத்தூர் 4-வது வார்டு… அக்டோபர் 12-ம் தேதி காலை அந்தத் தெருவே மூக்கைப் பிடித்துக்கொண்டு ஒதுங்கியது. காரணம், காலி மனையில் குவிந்திருந்த குப்பையிலிருந்து கிளம்பிய குப்பென்ற நாற்றம். “குப்பை நாற்றம்தானே” என்று முதலில் அலட்சியமாக நினைத்த மக்கள், நேரம் ஆக ஆக நாற்றம் நெஞ்சைக் குமட்டவே, ‘ஏதோ தப்பா நடந்திருக்கு’ என சந்தேகப்பட்டு கடத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் வேலுதேவன் தலைமையிலான போலீஸார் குப்பையைக் கிளறிப் பார்த்தபோது… அதிர்ச்சி காத்திருந்தது. குப்பைக்கு அடியில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம்!உடனடியாக தடய அறிவியல் துறையினர், வருவாய்த்துறையினர் வரவழைக்கப்பட்டனர். தோண்டத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உடல் வெளியே வந்துவிட்டது.
காரணம், வெறும் ஒரு அடி ஆழத்தில்தான் உடல் புதைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு அடிதான்… கொலையாளி எனச் சந்தேகப்படும் நபரைக் காட்டிக்கொடுத்துவிட்டது என்கிறார்கள் கடத்தூர் மக்கள்.யார் அந்தப் பெண்?

போலீஸாரின் விசாரணையில், உயிரிழந்தவர் பாப்பாத்தி என்பது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலை வட்டம் பெருவாங்கூரைச் சேர்ந்தவர். ஹோம் நர்ஸாக வேலை பார்த்து வந்தவர் என்கிறது போலீஸ் தரப்பு. இவருடன் கடந்த 6 மாதங்களாக கடத்தூர் வெங்கடசாமி தெருவில் வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வசித்து வந்தவர் வெங்கடாசலம் (41/46) எனக் கூறப்படுகிறது.
இவர் கடத்தூர் அருகே மணியம்பாடியைச் சேர்ந்தவர். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதாகவும், பாப்பாத்திக்கும் திருமணமாகி குழந்தைகள் இருந்தும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூரில் வேலை செய்து வந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கோவையில் ஹோம் நர்ஸ் வேலை பார்த்தபோதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் கடத்தூரில் வீடெடுத்துத் தங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது
சந்தேகம் கிளப்பிய தகராறு !வெங்கடாசலம் அடிக்கடி சொந்த ஊரான மணியம்பாடிக்குச் சென்று வருவாராம். இந்த நிலையில், பாப்பாத்தி தன்னிடம் சொல்லாமல் அடிக்கடி வெளியே செல்வதாகவும், அவருக்கு வேறு சிலருடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வெங்கடாசலத்துக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்டோபர் 2-ம் தேதியும் அப்படித்தான் தகராறு முற்றியதாகவும், அப்போது வெங்கடாசலம் கட்டையால் பாப்பாத்தியைக் கடுமையாகத் தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்தனர் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த பாப்பாத்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு வெங்கடாசலம் வெளியேறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.அக்டோபர் 6-ம் தேதி வீடு திரும்பியபோது

பாப்பாத்தி உயிரிழந்து கிடந்ததாகவும், பயத்தில் உடலைத் துணியால் மூட்டையாகக் கட்டி வீட்டருகே காலி மனையில் குழிதோண்டிப் புதைத்து, மேலே குப்பையைக் கொட்டி மறைத்ததாகவும் வெங்கடாசலம் வாக்குமூலம் அளித்ததாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
கணக்கு போட்டது மண்ணானது எப்படி?”பாப்பாத்தி ஏற்கனவே குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்தவர் என்பதால் யாரும் தேட மாட்டார்கள்; கடத்தூரில் யாருக்கும் அவரைத் தெரியாது; அதனால் விஷயம் வெளியே தெரியாது” என வெங்கடாசலம் கணக்குப் போட்டதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவசரத்தில் ஒரு அடி ஆழத்தில் புதைத்ததால் எழுந்த துர்நாற்றமே அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டது.
தலைமறைவாக இருந்த வெங்கடாசலத்தை வெளியூரில் வைத்துப் பிடித்த போலீஸார், முதலில் “எனக்கு எதுவும் தெரியாது” என்று சாதித்தவர், பின்னர் கிடுக்கிப்பிடி விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டதாகக் கூறுகின்றனர். “திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை” என்று அவர் தெரிவித்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
இது குறித்து கடத்தூர் இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் கேட்டபோது, “திருமணம் கடந்த உறவில் வாழ்ந்தவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் தாக்குதல் நடந்துள்ளது., வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்” என்றார்.
ஆனால், ஊர் மக்களோ, “ஆத்திரத்தில் அடித்திருந்தால் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கலாமே? 2-ம் தேதி அடித்துவிட்டு 6-ம் தேதி வந்து புதைத்தது எப்படி திட்டமிடாத கொலையாகும்?” எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவு வந்த பிறகே மரணத்தின் முழுப் பின்னணி தெரியவரும் என்கிறது காவல்துறை, சினிமாவை மிஞ்சும் இந்தச் சம்பவம் கடத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
