Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை “வெற்றி பயணம் திட்டம்” என்ற பெயரில் விரிவுபடுத்துவதாக சி.எம்.விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் தமிழக பெண்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த இலவச பயண திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பை சி.எம்.விஜய் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் அவர் உரையாற்றியதாவது: ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே அளவிடப்படுவதில்லை என்றும், பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் உள்ளிட்ட சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளே அதன் முன்னேற்றத்தை அளவிடும் அளவுகோல் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மகளிரின் பயண சுதந்திரம் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருப்பதாக அவர் கூறினார். தற்போது செயல்பாட்டில் உள்ள மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில், மாநகரம் மற்றும் நகர்ப்புறங்களில் சாதாரண பேருந்துகள் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிலோமீட்டர் வரை மட்டுமே பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதி இல்லை என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படியுங்க  மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு-வின் பகீர் பின்னணி..! திமுக ஒ.செ-வின் பரபரப்பு வீடியோ..!

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வசிக்கும் பெண்ணும் போக்குவரத்துக் கட்டணம் காரணமாக தனது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூகநீதிக் கொள்கையை அரசு முதன்மையாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, “வெற்றி பயணம்” என்ற பெயரில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்.

இதன்படி, முதல் கட்டமாக மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளுடன், எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தெரிவித்தார்.

மேலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் வகையில், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் கூறினார்.

இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், பெண்கள் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கைக்கும் எந்தக் கட்டுப்பாடும் இருக்காது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். “வெற்றி பயணம்” திட்டம் அடுத்தடுத்த கட்டங்களில் பிற சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்க  "கல்லறைக்குள் உறங்கும் 5 வயது பிஞ்சு: 8 மாதங்களுக்குப் பிறகு நீதி கேட்கும் பெற்றோர்... உலுக்கும் அம்பத்தூர் சம்பவம்!"

இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் என்றும், மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்குச் செல்லவும், பெண்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

“வெற்றி பயணம்” என்பது வெறும் கட்டணமில்லா பேருந்துப் பயணம் அல்ல என்றும், ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், பெண்களின் இயக்க சுதந்திரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும் அவர் அறிவித்தார்.

“வெற்றி பயணம்” திட்டத்தின் மூலம் பெண்களின் வாய்ப்புகள் விரிவடைந்து, குடும்பங்கள் முன்னேறி, சமூகநீதியும் சமத்துவமும் நிலைபெற்று, வளமான வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும் அரசின் பயணம் மேலும் வலுப்பெறும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படியுங்க  இல்லம் தேடிக் கல்வி: நிறுத்தாதே… தொடரு! தன்னார்வலர்களின் அதிரடி முழக்கம்!

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ.1,000 கோடி செலவினம் ஏற்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago