https://republictn.com/

2026 சட்டமன்ற தேர்தல் அதிர்வுகளில் இருந்து தி.மு.க இன்னும் மீளவே இல்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய ஒரு பக்கம் 38 பேர் கொண்ட குழு அறிக்கை தயார் செய்து வர, இன்னொரு பக்கம் தி.மு.க-வின் உட்கட்சி அமைப்பில் மிகப்பெரிய ‘மேஜர் சர்ஜரி’ செய்ய தலைமைகளுக்கிடையே ரகசிய விவாதங்கள் அனல் பறக்கின்றன.

குறிப்பாக, கூர்க் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், ‘கட்சிக் கட்டமைப்பை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்’ எனப் பல மட்டங்களிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் முதல் கட்டமாக, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பதிலாக, கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு அந்தப் நாற்காலியில் அமரலாம் என்று அறிவாலய வட்டாரத்தில் பலத்த பேச்சு அடிபட்டது. ஆனால், இந்த ரேஸில் கட்சியின் சீனியர் அமைச்சர்கள் சிலரும் திடீரென வண்டி ஏறியுள்ளதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

சீனியர்களின் இந்த முட்டி மோதல்களுக்கு நடுவே, இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் முற்றிலும் மாறுபட்ட அதிரடி வியூகம் ஒன்றை ஸ்டாலினிடம் முன்வைத்துள்ளார். “ரேஸில் இருக்கும் சீனியர்கள் யாருமே வேண்டாம்; 70 வயதைக் கடந்தவர்களுக்கு மீண்டும் மீண்டும் முக்கியப் பொறுப்புகளையும் புரொமோஷன்களையும் வழங்குவதை நிறுத்த வேண்டும். அதற்குப் பதிலாக ஜூனியர்களுக்கும், இளைஞர்களுக்கும் வழிவிட வேண்டும்” என்று உதயநிதி கறாராகப் பேசி வருகிறாராம்.

புதிதாக உருவெடுத்துள்ள அரசியல் சவால்களையும், ‘ஜென் இசட் தலைமுறை வாக்காளர்களையும் எதிர்கொள்ள பழைய முகம் உதவாது என்பது உதயநிதியின் கணக்கு. தி.மு.க-வை ‘முதியோர்களின் கட்சி’ என்று இளம் தலைமுறையினர் பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டுமானால், முக்கியப் பொறுப்புகளில் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

உள்ளூர் மட்டத்திலான நிர்வாகப் பொறுப்புகளில் இளைஞர்களைக் கொண்டுவரும் அதே வேளையில், பொதுச்செயலாளர் போன்ற டாப் லெவல் பதவிக்கு, சமூக சமன்பாடுகளையும், இன அடிப்படையிலான முக்கியத்துவத்தையும் கணக்கில் கொண்டு ஆ.ராசாவின் பெயரை உதயநிதி பலமாகப் பரிந்துரைத்து வருவதாக அறிவாலய உள்வட்டாரத் தகவல்கள் கசிகின்றன.

தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்டங்களை 78-லிருந்து 115 ஆகப் பிரித்து, புதிய இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக்கும் திட்டமும் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், கட்சியின் உச்சபட்ச பதவிகளில் உதயநிதியின் இந்த ‘இளம் ரத்தம்’ பாய்ச்சும் ஃபார்முலா ஜெயிக்கப் போகிறதா? அல்லது சீனியர்களின் பிடிவாதம் வெல்லப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago