https://republictn.com/

நடிகர் நடிக்கும் கமல்ஹாசனின் 237-வது திரைப்படம் (KH 237), தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மூலம் பிரபல சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவு சகோதரர்கள் (அன்பு – அறிவு) இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர்.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான Raaj Kamal Films International தயாரிக்கிறது.

வழக்கமான வணிகத் திரைப்படமாக இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), அனிமேஷன் மற்றும் அதிநவீன கணினி கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட அறிவியல் புனைகதை மற்றும் அதிரடித் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

இந்தப் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று செயற்கை நுண்ணறிவு தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சிகளிலும், முதற்கட்ட பணிகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டுள்ளார்.

படத்திற்காக வலுவான தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத் திரையுலகின் முன்னணி திரைக்கதை ஆசிரியரான ஷ்யாம் புஷ்கரன் திரைக்கதையை எழுதி வருகிறார். இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் பணியாற்றுகிறார்.

ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ஒளிப்பதிவின் மூலம் கவனம் பெற்ற சுனில் கே. எஸ் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ஷமீர் கே.எம். மேற்கொள்கிறார். கலை இயக்குநராக வினேஷ் பங்கலான் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது தாமதமாகி வருகிறது. இதற்குக் காரணம், படத்தில் இடம்பெறும் அதிகளவிலான CGI (Computer Generated Imagery) மற்றும் VFX (Visual Effects) காட்சிகளுக்கான முன்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், படத்தில் கமல்ஹாசனை இளமையான தோற்றத்தில் காட்டுவதற்காக ‘டி-ஏஜிங்’ (De-aging) எனப்படும் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே கமல்ஹாசன் அமெரிக்காவில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாகவும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான தரத்தில் CGI மற்றும் VFX காட்சிகளை உருவாக்க இரண்டு முன்னணி சர்வதேச CGI ஸ்டுடியோக்களுடன் படக்குழு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தப் படம் வழக்கமான பாடல்கள், காதல் காட்சிகள் அல்லது வழக்கமான வணிக அம்சங்கள் இல்லாமல், முழுக்க முழுக்க கதையையும் அதிரடியையும் மையமாகக் கொண்ட ‘ரா ஆக்ஷன்’ (Raw Action) திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில்அசோக் செல்வன் ,அருள்நிதி மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இது ஒரு பிரம்மாண்ட மல்டிஸ்டாரர் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் கவனம் பெற்ற நடிகை கல்யாணி பிரியதர்ஷன், இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதிநவீன தொழில்நுட்பம், வலுவான தொழில்நுட்பக் குழு மற்றும் வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி வரும் கமல்ஹாசனின் 237-வது திரைப்படம், தமிழ் சினிமாவில் புதிய தொழில்நுட்ப தரத்தை உருவாக்கும் படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 days ago at 7 days ago