https://republictn.com/

புதுக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும், அதிமுகவின் முன்னாள் அமைச்சராகவும் விளங்கிய சி.விஜயபாஸ்கர், வரும் 29ம் தேதி தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர், அண்மையில் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அவரது இந்த திடீர் முடிவு பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது அதற்கான பின்னணி வெளிவந்துள்ளது. வரும் ஜூன் 29-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அரசியல் விழாவில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொள்ளவுள்ளார். வெறும் தனி நபராக மட்டுமில்லாமல், தனது பலத்தைக் காட்டும் விதமாக சுமார் 10,000 ஆதரவாளர்களுடன் அவர் தவெக-வில் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி அமைத்துத் தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள தவெக-விற்கு, சி.விஜயபாஸ்கர் போன்ற மூத்த, அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகியின் வரவு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், அவருக்கு தவெக-வில் மிக முக்கியமான மாநில அளவிலான உயரிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் டெல்டா மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களில் விஜயபாஸ்கரின் இந்த முடிவு அந்த கட்சிக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாகத் உருவெடுத்துள்ள தவெக, இத்தகைய மூத்த தலைவர்களைத் தன்பக்கம் இழுப்பதன் மூலம் தனது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. ஜூன் 29 மாமல்லபுரம் விழா தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago