Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கில் சிக்கி, ஈஷா அறக்கட்டளையின் கைலாஷ் யாத்திரைக் குழுவைச் சேர்ந்த 80 பேரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் 77 யாத்ரீகர்களும், 3 தன்னார்வலர்களும் அடங்குவர். திபெத்தின் கியிரோங் பகுதியில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் யாத்ரீகர்கள் தங்கியிருந்தபோது திடீரென வெள்ளம் ஏற்பட்டதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேதனையுடன் வீடியோ மற்றும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கைலாஷ்-மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, கியிரோங் குடிவரவு மையத்தில் குழுவினர் இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அந்தக் கட்டிடமும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாயமான 80 பேரில் 34 ஆண்களும், 46 பெண்களும் உள்ளனர். 77 யாத்ரீகர்களும் வெளிநாட்டவர்கள் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுடன் இருந்த 3 தன்னார்வலர்கள் நேபாளத்தின் டிமுரே பகுதியில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  இந்தியாவின் ராக்கெட் பலத்தை தீர்மானிக்கும் தமிழ் மூளை: யார் இந்த நாராயணன் அப்பு?

ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் மொத்தம் 21 குழுக்கள் பங்கேற்றிருந்தன. இதில் 495 பேர் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர். மேலும், 743 பேர் திபெத் பகுதியிலும், 148 பேர் நேபாளத்தின் பிற பகுதிகளிலும் பாதுகாப்பாக இருப்பதாக சத்குரு தெரிவித்துள்ளார். தற்போது தொடர்பு இல்லாத 77 யாத்ரீகர்களும், 3 தன்னார்வலர்களுமே 80 பேர் கொண்ட குழுவாகும்.

பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், மாயமானவர்களின் நிலை குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வ தகவலைப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சத்குருவும் தாமாகவே சம்பவ இடத்திற்குச் செல்ல முயன்றதாகவும், ஆனால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Republic Tamil

இதையடுத்து, திபெத்தின் கியிரோங் பகுதிக்குச் சென்று மீட்புப் பணிகளில் தங்களது குழுவினரும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சீன அதிகாரிகளிடம் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தாமும், சில ஈஷா தன்னார்வலர்களும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை! டெல்லி தீ விபத்தில் உயிர்காத்த மெத்தை கடைக்காரருக்கு குவியும் பாராட்டு!

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட இந்தப் பேரிடர் காரணமாக பலர் மாயமாகியுள்ளனர். பனிப்பாறை சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கே பேரழிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 80 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள சத்குரு, அவர்களைப் பற்றிய தகவலைப் பெறவும், மீட்புப் பணிகளில் உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கியிரோங் பகுதியில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago