டென்னிஸ் உலகின் முன்னாள் முதன்மை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், தனது பிரசவத்தின்போது ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் குறித்து மனம் திறந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு தனது மகள் ஒலிம்பியாவைப் பெற்றெடுத்தபோது, தான் மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பியதாக செரீனா தெரிவித்துள்ளார்.
பிரசவத்தின்போது குழந்தையின் இதயத் துடிப்பு திடீரெனக் குறைந்ததால், செரீனாவுக்கு அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தை நலமாகப் பிறந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் செரீனாவுக்கு கடுமையான இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஏற்கனவே தனக்கு ரத்தம் உறையும் பிரச்சினை இருந்ததை அறிந்திருந்த அவர், நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, உடனடியாக ஸ்கேன் செய்யுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் அவரது கோரிக்கையை மருத்துவப் பணியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், செரீனா தொடர்ந்து வலியுறுத்தி மருத்துவரை அழைக்கச் செய்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரது நுரையீரல் தமனிகளில் மிகப்பெரிய ரத்த உறைவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலை மேலும் மோசமடைந்து இதயத்தைப் பாதித்திருந்தால், அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும்.
நுரையீரலில் ஏற்பட்ட ரத்த உறைவைத் தொடர்ந்து, வயிற்றில் ஏற்பட்ட ரத்தக் கசிவு மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தையல் பிரிந்தது உள்ளிட்ட அடுத்தடுத்த சிக்கல்களையும் செரீனா எதிர்கொண்டார். இதனால் மொத்தம் நான்கு அறுவை சிகிச்சைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் சுமார் ஆறு வாரங்கள் படுக்கையிலேயே ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.
தனது உடல்நிலையைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால்தான், மருத்துவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி ஸ்கேன் செய்ய வைத்ததாகவும், அந்த முடிவு தனது உயிரைக் காப்பாற்றியதாகவும் செரீனா தெரிவித்துள்ளார். அதேவேளையில், இதுபோன்ற சூழ்நிலைகளில் அனைத்து பெண்களுக்கும் உரிய மருத்துவக் கவனம் கிடைப்பதில்லை என்றும், குறிப்பாகக் கருப்பினப் பெண்கள் பிரசவத்தின்போது அதிக ஆபத்துகளை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு பெண்ணின் உடல்நலக் குறித்த புகாரையும் மருத்துவ உலகம் கவனமாகக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2017-ஆம் ஆண்டு பிரசவத்தின்போது ஏற்பட்ட இந்த உயிருக்கு ஆபத்தான மருத்துவச் சிக்கலுக்கு முன்பாகவே, 2011-ஆம் ஆண்டிலும் செரீனா இதேபோன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்தார். 2010-ஆம் ஆண்டு முனிச் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உடைந்த கண்ணாடித் துண்டு அவரது காலில் குத்தியதால் காயம் ஏற்பட்டது.
இதற்காக சில காலம் ஓய்வில் இருந்தபோது, அவரது காலில் உருவான ரத்த உறைவு நுரையீரலுக்குச் சென்று அடைப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி மீண்டார். இதனால்தான் 2017-ஆம் ஆண்டு பிரசவத்தின்போது ஏற்பட்ட மூச்சுத் திணறலின் தீவிரத்தை அவரால் உடனடியாக உணர முடிந்தது.
முதல் பிரசவத்தில் ஏற்பட்ட இந்த அனுபவத்தின் காரணமாக, 2023-ஆம் ஆண்டு தனது இரண்டாவது மகள் அதிராவைப் பெற்றெடுக்கும் போது செரீனா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களிலும் தனக்கு ஏதேனும் ரத்தக் கசிவு ஏற்படுகிறதா என தொடர்ந்து கவனித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரசவத்தின்போது எந்தவிதமான சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தனது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க நான்கு மருத்துவர்களை பிரசவ அறையில் தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே, அண்மையில் செரீனா வில்லியம்ஸ் தனது கழுத்தில் ஏற்பட்ட பெரிய கட்டி குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். கடந்த ஆண்டு மே மாதம் அவரது கழுத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனையில் அது ‘பிராங்கியல் கிளெப்ட் சிஸ்ட்’ எனப்படும் நீர்க்கட்டி என்பது தெரியவந்தது.
ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கட்டி நாளடைவில் திராட்சைப்பழத்தின் அளவுக்கு பெரிதாக வளர்ந்தது. தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததால், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டது. பயாப்ஸி பரிசோதனையில் அது புற்றுநோய் கட்டி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
பிரசவத்துக்குப் பிறகு தனது உடல்நலத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் ‘Zepbound’ எனப்படும் GLP-1 வகை மருந்தைப் பயன்படுத்தியதாகவும் செரீனா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் இதுபோன்ற மருந்துகள் செயல்திறனை மேம்படுத்தும் மருந்துகளாகக் கருதப்படுமா என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், தனது உடல்நிலை தற்போது தான் டென்னிஸ் விளையாடிய காலத்தைவிட ஆரோக்கியமாக இருப்பதாக செரீனா தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒவ்வொரு மருத்துவப் போராட்டத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்து வரும் செரீனா, குறிப்பாக பெண்கள் தங்களது உடல்நலக் குறைகளை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களிடம் தைரியமாகத் தெரிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
குறிப்பாக, கருப்பினப் பெண்கள் பிரசவத்தின்போது எதிர்கொள்ளும் உடல்நல அபாயங்கள் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு, அதன்பிறகும் டென்னிஸ் களத்துக்குத் திரும்பி சாதனைகளைப் படைத்த செரீனா வில்லியம்ஸின் இந்தப் போராட்டம், அவரது விளையாட்டு வாழ்க்கையைத் தாண்டி, பெண்களின் உடல்நலம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு குறித்த முக்கியமான செய்தியாகவும் அமைந்துள்ளது.
