Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

ஜங்க் உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில், அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு (HFSS) நிறைந்த உணவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பகுதிகளிலும் ஜங்க் உணவுகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் துரித உணவுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பள்ளிகளில் சத்தான, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவுகள் மட்டுமே கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை சம்பந்தப்பட்ட துறைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை லேபிள்

ஜங்க் உணவுகள் மட்டுமின்றி, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் (Front-of-Pack Labeling) நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான எச்சரிக்கை வாசகங்களை அச்சிடுவது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உணவில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவு உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்து விவரங்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இதையும் படியுங்க  மரண தோல்வி..! அடியோடு அழிக்கத்துடிக்கும் பாஜக..! காங்கிரஸுடன் இணையும் மம்தாவின் திரிணாமுல்..?

பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் எச்சரிக்கை லேபிள் ஒட்டுவது தொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பான விசாரணையின்போது நீதிபதிகள் கடும் கேள்விகளை எழுப்பினர்.

“ஏன் இந்திய மக்கள் ஆரோக்கியமாக இருக்கக் கூடாது? பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தத்திற்கு நீங்கள் அடிபணிகிறீர்களா?” என FSSAI அமைப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞரிடம், “உங்களுக்குப் பேரக்குழந்தைகள் இருக்கிறார்களா? அடுத்த முறை இந்த வழக்கின் தீர்ப்பு வரும்போது குர்குரே, மேகி போன்ற பாக்கெட்டுகளின் மேல் எப்படிப்பட்ட எச்சரிக்கைகள் இருக்கப் போகிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள்” என நீதிபதி குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிலும் ‘நியூட்ரி-கிரேடு’ முறை?

நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள ‘நியூட்ரி-கிரேடு’ (Nutri-Grade) போன்ற முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த முறையில் உணவுப் பொருட்களின் சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ளிட்ட அளவுகளின் அடிப்படையில் A, B, C, D என தரப்படுத்தப்படுகிறது. அதிக ஆபத்து கொண்ட உணவுப் பொருட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை குறியீடு வழங்கப்படும். இதன் மூலம், உணவுப் பொருட்களை வாங்கும்போது அதன் உடல்நலத் தாக்கம் குறித்து நுகர்வோர் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

பள்ளிகளைச் சுற்றி ஜங்க் உணவுகளுக்கு தடை

மகாராஷ்டிராவில் பள்ளிகளின் 50 மீட்டர் சுற்றளவுக்குள் சிப்ஸ், கோலா, வடாபாவ் உள்ளிட்ட ஜங்க் உணவுகளை விற்பனை செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை (FDA) தடை விதித்தது.

இதையும் படியுங்க  ஆசையில் துபாய் சென்ற பெண்களுக்கு நடந்த கொடூரம்… வெளியான பரபரப்பு உண்மை!”

இந்த உத்தரவை எதிர்த்து புனேயைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்திய பாரம்பரிய நொறுக்குத்தீனிகளான நம்கீன், முறுக்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு சர்வதேச அளவிலான பேக்கேஜிங் விதிமுறைகளைப் பின்பற்றுவது சிரமமாக இருப்பதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு சமூக ஆர்வலர்கள், “நம்மால் விண்வெளிக்கு ராக்கெட்டுகளையும், உலகமே வியக்கும் வகையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையான UPI-யையும் உருவாக்க முடிகிறது. ஆனால், ஒரு பிஸ்கெட் பாக்கெட்டின் மீது ‘அதிக சர்க்கரை’ (HIGH SUGAR) என்று அச்சிட முடியாதா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ராஜஸ்தானிலும் அதிரடி உத்தரவு

ராஜஸ்தானில் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை பள்ளிகளில் விற்பனை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  தெருக்களில் சாதிப்பெயர் நீக்கம் இப்போதைக்கு இல்லையா? உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு அருகிலும் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும் தங்களது வளாகத்தில் ஆரோக்கியமான உணவு முறையை உறுதி செய்யும் வகையில், நான்கு வாரங்களுக்குள் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் பள்ளிகளில் இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாறப்போகும் பாக்கெட் உணவுகளின் தோற்றம்?

நீதிமன்றங்களின் இந்த தொடர் உத்தரவுகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதன் மூலம், எதிர்காலத்தில் நாம் வாங்கும் சிப்ஸ், நூடுல்ஸ், குளிர்பானங்கள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை விவரங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகளை நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் தெளிவான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்குவதும் இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago