சட்டமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளன. குறிப்பாக, நிதியமைச்சர் மரிய வில்சனின் பேச்சு மற்றும் அதற்கு முதலமைச்சர் விஜய்யின் எதிர்வினை ஆகியவை அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படும் முக்கிய விஷயங்களாக மாறியுள்ளன.
சபையில் வெடித்த காரசார விவாதம்
ஆகஸ்ட் 10 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் உரை வாசிக்கப்பட்ட போது, நிதியமைச்சர் மரிய வில்சன் பல தமிழ் வார்த்தைகளையும், பெரிய எண்களையும் தவறாக உச்சரித்ததாகக் கூறி, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் சிலர் அதைத் தன்மையாகச் சுட்டிக்காட்டினர்.
ஆனால், அதற்குத் தற்காப்புடன் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “என்னை கேலி பண்றீங்களா? யாருக்காகவும் நான் மாத்திக்க மாட்டேன். யாருக்கோசரமும் நான் மாத்திக்க மாட்டேன். முடிஞ்சா கேளுங்க. நீங்க தமிழ்ல பேசற மாதிரி எனக்கு யூனிக்கா பேச வராது, இப்படித்தான் பேச முடியும். அதை அக்செப்ட் பண்ணுங்க” என ஆவேசமாகப் பேசியது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சபாநாயகரின் அட்வைஸ்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நிதியமைச்சரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த சபாநாயகர், நிதியமைச்சரைத் தனியாக அழைத்து ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அவையில் மூத்த உறுப்பினர்கள் எவ்வித பதற்றமுமின்றி எதிர்கொள்ளும் முறையைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதலமைச்சரின் கோபத்தை மேலும் அதிகரிக்காமல், பட்ஜெட் பதில் உரையின் போது நிலைமையைச் சமாளிக்கும் வகையில் பேசுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

சுதாரித்துக் கொண்ட அமைச்சர்
சபாநாயகரின் ஆலோசனையை ஏற்று, ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் பதில் உரையின் போது நிதியமைச்சர் மரிய வில்சன் தனது முந்தைய பேச்சிற்கு விளக்கம் அளித்து, மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தார்.
“எனக்கு மொழிப் பயிற்சி தடையாக இருப்பது உண்மைதான், அதை நான் மறுக்கவில்லை. அன்று ஆவேசப்பட்டுவிட்டேன். இது எங்களுக்கு முதல் முறை என்பதால், மூத்த உறுப்பினர்களிடமிருந்து கற்றுக் கொண்டு படிப்படியாக வலுவாகத் திரும்புவேன்” என ஒப்புக்கொண்டார்.
பாடலின் மூலம் புகழாரம்
மேலும், முதலமைச்சர் விஜய்யைப் போற்றும் வகையில், “கருணை இருந்தால் வள்ளலாகலாம்… கடமை இருந்தால் வீரனாகலாம்… பொறுமை இருந்தால் மனிதனாகலாம்… மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்” என்ற பாடலைப் பாடி அவையின் கவனத்தை ஈர்க்க முயன்றார்.
இருப்பினும், பொதுவாக நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் வெளிப்படும் முதலமைச்சரின் இயல்பான மகிழ்ச்சியான முகபாவனை, இந்தப் பாடலின் போது வெளிப்படவில்லை என்பது அவையில் இருந்தவர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
அரசியல் களத்தின் பார்வை
புதிய அரசாகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அமைச்சர்களின் பேச்சு மற்றும் அவை நடத்தை ஆகியவை மக்களின் நேரடிப் பார்வையில் உள்ளன. ஆரம்பகட்டத் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்வது நல்ல நிர்வாகத்திற்கு அடையாளம் என்றாலும், ஆளுங்கட்சியின் பிம்பத்தைப் பாதுகாப்பதில் முதலமைச்சர் காட்டும் கண்டிப்பும் கவனமும் இந்த நிகழ்வின் மூலம் தெளிவாக புலப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
