மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 3, 2026) பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவில், நாட்டில் சாலை இருக்கும் இடமெல்லாம் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில் தெளிவாக வரையறுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இல்லாத தனி நடைபாதை கட்டாயம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, இந்திய சாலைப் பாதுகாப்பு வரலாற்றில் மிக முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ஹா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜிடம், “பெரிய முதலீடுகள் அல்லது புதிய கட்டுமானப் பணிகள் முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சாலை இருக்கும் இடமெல்லாம் பாதசாரிகளுக்கான பகுதியை கயிறு, வெள்ளைக் கோடு அல்லது எளிய அடையாளங்கள் மூலமாகவாவது உடனடியாக தெளிவாக வரையறுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
மேலும், இந்த உத்தரவை நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் அறிவித்து, நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் அச்சுறுத்தல் இன்றி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் நடந்து செல்லும் சூழலை உருவாக்குவது அரசின் அடிப்படை பொறுப்பு என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சாலைகள் வாகனங்களுக்காக மட்டுமல்ல; முதன்மையாக மனிதர்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் இடமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, வாகனங்களின் வசதியை மட்டுமே மையமாகக் கொண்டு சாலைகள் வடிவமைக்கப்படும் தற்போதைய நடைமுறையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. “சாலைகளில் நடப்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. அதற்குப் பிறகுதான் வாகனங்களின் பயன்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என்று அமர்வு குறிப்பிட்டது.
இந்தியாவில் நடைபாதைகள் இல்லாமை, அவை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது மற்றும் பராமரிப்பு குறைபாடு ஆகியவை வெறும் நிர்வாகப் பிரச்சினைகள் அல்ல; அவை ஒரு “நாகரிகப் பிரச்சினை” என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த ஜூன் 19, 2026 அன்று இதே அமர்வு வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்புகள் இல்லாத நடைபாதையில் நடப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள வாழ்வதற்கான உரிமையிலும், பிரிவு 19(1)(d)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமாக நடமாடும் உரிமையிலும் அடங்கும் அடிப்படை உரிமை என்று தெளிவுபடுத்தியிருந்தது.
இந்த வழக்கு, பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவர் நடைபாதை இல்லாத சாலையில் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்காகும். சிறுவனின் பெற்றோர் தாக்கல் செய்த இழப்பீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வெறும் இழப்பீடு வழங்குவதில் மட்டுமே நின்றுவிடாமல், நாடு முழுவதும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த விரிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
‘மணியார் இலியாஸ் @ ஷேக் ரியாஸ் மற்றும் பலர் எதிர் பி. அய்யப்பன்’ என்ற வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.11.44 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சாலைகளில் நடைபாதைகளை அமைப்பது, அவற்றில் உள்ள கடை ஆக்கிரமிப்புகள், தற்காலிக கட்டிடங்கள் மற்றும் வாகன நிறுத்தங்களை அகற்றி, தொடர்ந்து பராமரிப்பது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சட்டரீதியான பொறுப்பு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபாதைகளை பாதுகாக்க தனிப்பட்ட சட்டம் அல்லது அதற்கென தனி ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எனவே, பாதசாரிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நடைபாதை ஆக்கிரமிப்புகளைக் கண்காணிக்கவும், சட்டப்பூர்வமான தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கென ஒரு பிரத்யேக ஒழுங்குமுறை அமைப்பை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்திய சட்ட ஆணையம் ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் அவசியத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களும் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 36 ஆயிரத்து 526 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். இது மொத்த சாலை விபத்து உயிரிழப்புகளில் சுமார் 20.6 சதவீதமாகும்.
மேலும், இந்தியாவில் உள்ள நடைபாதைகளில் சுமார் 84 சதவீதம், அதிகாரப்பூர்வ சாலைப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பாதசாரிகளின் பாதுகாப்பு என்பது அரசின் விருப்பத் தேர்வு அல்ல; அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் பாதுகாப்பான, ஆக்கிரமிப்பற்ற மற்றும் தெளிவாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகளை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
