Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் எழுப்பிய கேள்விக்கு, மேகதாது அணைத் திட்டத்தின் திருத்தப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கை (DPR) இதுவரை மத்திய நீர் ஆணையத்திற்கு வரவில்லை என்றும், கர்நாடக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்திருந்த பழைய திட்ட அறிக்கை ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி உறுதியளித்துள்ளார்.

மாநிலங்களவையில் கமல்ஹாசன் எம்.பி., மேகதாது அணைத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி, கர்நாடக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாது குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு தெரிவித்து கர்நாடக அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க  மத்திய - மாநில அரசுகளுக்கு கமல் வைத்த முக்கிய கோரிக்கை

மேலும், காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அந்த திருத்தப்பட்ட புதிய DPR இதுவரை மத்திய நீர் ஆணையத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை, காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்புக்கு முரணாக, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான நீர் பயன்பாட்டை முன்வைத்திருந்ததால் மத்திய நீர் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

இனிமேல் கர்நாடக அரசு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையை சமர்ப்பித்தாலும், அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே பரிசீலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட இந்தப் பதிலுக்கு பின்னர், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “காவிரி என்பது மாநிலங்களால் பகிர்ந்து பயன்படுத்தப்படும் நதி; அது சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது. இரு மாநிலங்களும் சட்டத்தை மதிப்பதே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்க  ஜூன் 28 மறக்கக்கூடாத கடமை: குழந்தைகளின் சிரிப்பு என்றும் நிலைக்க 2 சொட்டு போலியோ மருந்து!
Republic Tamil

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் விதிமுறைகளின்படியே மத்திய அரசு முடிவெடுக்கும் என்று அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழியை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இதே மேகதாது விவகாரம் தொடர்பாக, “காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகாவிற்கு, தமிழகம் உள்ளிட்ட கீழ்மடை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்திருந்தது.

அந்தப் பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அந்த விளக்கத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் எழுதியிருந்தார். மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய விரிவான திட்ட அறிக்கை இதுவரை மத்திய நீர் ஆணையத்திற்கு வரவில்லை என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  "வேட்டைக்களம் தயார்: 'KH 237' படத்தில் கமலை இளமையாக்கும் AI மேஜிக்… ஆக்ஷனில் இறங்கும் அன்பறிவு!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago