தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாய் சச்தேவ் உடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையான வரலட்சுமி, அவருடன் 2018-ஆம் ஆண்டு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது விஜய்யின் அரசியல் பயணம் குறித்து தான் கூறிய வார்த்தைகள் இன்று நிஜமாகியிருப்பதை இந்தச் சந்திப்பின் போது நினைவுகூர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, வரலட்சுமி மற்றும் அவரது கணவர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு வெறும் வாழ்த்து பரிமாற்றமாக மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டின் பெண்கள் நலன் மற்றும் மேம்பாடு தொடர்பான சில முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடைபெற்றதாக வரலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்தப் பதிவைப் பற்றி என்ன எழுதுவது என்று நீண்ட நேரம் யோசித்தேன். ஆனால், இதைப் பற்றி ஏற்கனவே நிறைய பேசியிருக்கிறோம் என்று உணர்ந்தேன். எனவே ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
மக்கள் நூறு விதமாக பேசலாம். ஆனால் நாளின் முடிவில் சி. ஜோசப் விஜய்தான் நம் முதலமைச்சர். அதிலும் அவர் இங்கு நிலைத்து நிற்கவே வந்திருக்கிறார்.
ஒருவரை விமர்சிப்பது மிகவும் எளிது. ஆனால் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அபாரமான துணிச்சல், மன உறுதி மற்றும் தமிழக மக்களின் அளவற்ற அன்பு தேவை. அந்த உயரிய பதவிக்கும், அதில் அமர்ந்திருப்பவருக்கும் நாம் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.
வார்த்தைகளை விட செயல்களே வலிமையானவை. எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு காலம்தான் உண்மையை உணர்த்தும். அதுவரை அவர் என்ன சாதிக்கிறார் என்பதைப் பார்க்க கொஞ்சம் பொறுமையையும், மரியாதையையும், ஊக்கத்தையும் வெளிப்படுத்துவோம்.
ஐ லவ் யூ சார். நான் எப்போதும் ஒரு ‘விஜய் வெறியன்’. அது ஒருபோதும் மாறாது.

எங்களைச் சந்தித்து இவ்வளவு நேரம் ஒதுக்கி, மிகுந்த அன்போடும் எளிமையோடும் உரையாடியதற்கு மனமார்ந்த நன்றி. சர்க்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான் உங்களிடம் கூறிய வார்த்தைகளை நினைத்து இப்போது இருவரும் சிரித்தோம். அப்போதே இதுதான் உங்கள் பயணம் என்று எனக்குத் தெரிந்தது.
முதலமைச்சர் என்ற உயரிய பொறுப்பில் இருந்தபோதும், நீங்கள் எப்போதும் இருந்த அதே அன்புடனும் பணிவுடனும் எங்களை வரவேற்றது மகிழ்ச்சியளித்தது.
பெண்கள் நலன் சார்ந்த சில முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் தலைமையின் கீழ் உருவாகவிருக்கும் அற்புதமான மாற்றங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
கடவுளின் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். உங்கள் தலைமையில் தமிழ்நாட்டு மக்கள் மேலும் செழித்து வளர வாழ்த்துகள்.”
மேலும், சர்க்கார் திரைப்படத்தில் விஜய்க்கு எதிராக வில்லி மற்றும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த வரலட்சுமி, அப்போது நடைபெற்ற படப்பிடிப்பின் போது விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து பேசியதாகவும், “அன்று நான் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது” என்று இந்தச் சந்திப்பில் நினைவுகூர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக முதலமைச்சர்களை திரைப் பிரபலங்கள் சந்திக்கும் போது சில நிமிடங்கள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து திரும்பிச் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை, வரலட்சுமி மற்றும் அவரது கணவர் நிக்கோலாய்க்காக முதலமைச்சர் விஜய் நீண்ட நேரம் ஒதுக்கி, நிதானமாக பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“ஓடும் ரயிலில் கணவருக்கு ‘கூலிப்படை’ ஸ்கெட்ச்; கொள்ளை நாடகத்தை அக்குவேறாக உடைத்த ஒரே ஒரு போன் கால்!”
முதலமைச்சர் என்ற உயரிய பதவியை ஏற்ற பின்னரும் விஜய் மாறாமல் அதே அன்பு, எளிமை மற்றும் பணிவுடன் தங்களை வரவேற்றதாகவும் வரலட்சுமி தனது பதிவில் பாராட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பல்வேறு திரைப்பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயனும் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வரிசையில் தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதும், அவர் வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
