Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சீனாவைச் சேர்ந்த 63 வயதான லீ என்ற முதியவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு பல் லேசாக வலிக்கத் தொடங்கியது. அதற்குச் சிகிச்சை பெற வேண்டும் என்று எண்ணியிருந்த அவர், ஒரு நாள் மிகவும் கவர்ச்சிகரமான விளம்பரத்தைப் பார்த்தார்.

அந்த விளம்பரத்தில், “காலையில் பல் சிகிச்சை செய்துகொண்டால், மதியமே மட்டன் சாப்பிடலாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடி மற்றும் வலியற்ற சிகிச்சை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு அவர் தொடர்புகொண்டார்.

அழைப்பு வந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனையிலிருந்து கார் அனுப்பி, அவரை அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குச் சென்றதும், “என்ன பிரச்சினை?” என்று கேட்ட மருத்துவர்கள், அவருக்கு ஒரு பல் மட்டும் வலிப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து பரிசோதனை செய்தனர்.

பரிசோதனை முடிந்ததும், “இது மிகவும் சிறிய அறுவைச் சிகிச்சை. ஐந்து நிமிடங்களில் முடிந்துவிடும்” என்று கூறி, அவருக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவைச் சிகிச்சை அறைக்குள் அழைத்துச் சென்றனர். அன்றைய தினம் அவர் தனியாகவே மருத்துவமனைக்குச் சென்றிருந்ததால், உடன் யாரும் இல்லை.

இதையும் படியுங்க  அமெரிக்காவை ஆதரித்த ஒரே முஸ்லிம் நாடு பாகிஸ்தான்..! இந்தியர்களின் சாய்ஸ் ரஷ்யா.. அம்பலப்படுத்திய ஆய்வு..!

சிகிச்சை முடிந்து வெளியே வந்தபோது, அவரது வாய் முழுவதும் ரத்தமாக இருந்தது. என்ன நடந்தது என்று புரியாமல் அதிர்ச்சியடைந்த அவர், மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டார்.

அப்போது தான், ஒரு பல் வலியுடன் வந்திருந்த அவரிடமிருந்து மொத்தம் 12 பற்களை அகற்றியிருப்பது தெரியவந்தது. இதற்காக அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் 1.4 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், மேலும் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது வங்கி கணக்கில் இருந்த பெரும்பாலான பணமும் காலியாகிவிட்டதால், வீட்டிற்குத் திரும்புவதற்குக் கூட போக்குவரத்து செலவுக்குப் பணமின்றி, அவர் நடந்தே வீட்டுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டிற்குச் சென்றதும், அவரது குடும்பத்தினர் அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஒரு பல் வலிக்காகச் சென்றவர், பல பற்கள் அகற்றப்பட்ட நிலையில் வீடு திரும்பியிருந்தார்.

மேலும், லீக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததுடன், இரண்டு முறை இதய அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  உக்ரைன் போர்: இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி மிட்டலின் ஆலை மீது ரஷ்யத் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு..!

இத்தகைய உடல்நிலை கொண்ட ஒருவருக்கு, குடும்பத்தினரின் அனுமதியின்றி இவ்வளவு பெரிய சிகிச்சை மேற்கொண்டது எப்படி என்று அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பி, காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு விளக்கங்கள் அளித்தபோதிலும், அவை ஏற்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, முதியவரிடமிருந்து வசூலிக்கப்பட்ட முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், அந்த மருத்துவமனையில் முழுமையான ஆய்வு நடைபெறும் வரை அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது முடிந்தவரை குடும்ப உறுப்பினர் அல்லது நம்பகமான ஒருவரை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல், மிகைப்படுத்தப்பட்ட மருத்துவ விளம்பரங்களை நம்பி உடனடியாக முடிவு எடுக்காமல், மருத்துவமனையின் நம்பகத்தன்மை, மருத்துவர்களின் தகுதி மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து உறுதி செய்த பிறகே சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது.

இதையும் படியுங்க  என் அமைதியை சீண்டிப் பார்க்க வேண்டாம்..! விரைவில் பங்களாதேஷ் வருவேன்..! ஷேக் ஹசீனா அதிரடி..!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago