தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரும், சாகித்திய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளருமான பூமணி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 79-ஆவது வயதில் காலமானார்.
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு, தமிழ் இலக்கிய உலகையும், திரையுலகையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூமணி, தனது படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவர் எழுதிய ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக, 2014-ஆம் ஆண்டு மத்திய அரசின் உயரிய இலக்கிய விருதான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘அசுரன்’ திரைப்படம், பூமணி எழுதிய புகழ்பெற்ற ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அவரது எழுத்து உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
‘வெக்கை’, ‘அஞ்ஞாடி’, ‘பிறகு’, ‘வறப்பு’, ‘வாய்க்கால்’, ‘கொம்மை’ உள்ளிட்ட பல சிறந்த நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். மேலும், ‘கருவேலம் பூக்கள்’ திரைப்படத்தை இயக்கியவரும் பூமணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமணியின் மறைவு குறித்து தமிழ் திரையுலகினர், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது வாசகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்குகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இலக்கிய உலகிற்கு எண்ணற்ற சிறந்த படைப்புகளை வழங்கி, பல தலைமுறை வாசகர்களின் மனதில் நிலையான இடம்பிடித்த எழுத்தாளர் பூமணியின் மறைவு, தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
