https://republictn.com/

நெல்லை மாவட்டத்தில், ஐபோன் வாங்கும் ஆசையில் இரண்டு இளைஞர்கள், அப்பாவி பெண்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நிறுவனம் தவணைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய பின்னரே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த 26 வயதான மோகனசுதா, தனது உறவினர்களுக்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற உதவி செய்ய முயன்றுள்ளார்.

இதற்காக, நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த தனது அறிமுகமான அலெக்ஸ் என்பவரை மோகனசுதா தொடர்புகொண்டுள்ளார். தனக்கு தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் இருப்பதாகவும், அவர் மூலம் எளிதில் கடன் பெற்றுத் தர முடியும் என்றும் அலெக்ஸ் உறுதியளித்துள்ளார்.

அதை நம்பிய மோகனசுதா மற்றும் அவரது உறவினர்கள் நால்வர், தங்களது ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் நகல்களை அலெக்ஸிடம் வழங்கியுள்ளனர்.

இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி, மோகனசுதா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற அலெக்ஸ், அந்தப் பணத்தை அவர்களிடம் வழங்காமல், விலை உயர்ந்த ஆப்பிள் ஐபோன்களை வாங்கி சிலரிடம் விற்றுவிட்டு தலைமறைவானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் மோகனசுதா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, நிலுவையில் உள்ள கடன் தவணையைச் செலுத்துமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுதா மற்றும் அவரது உறவினர்கள், தாங்கள் எந்தவிதமான கடனும் பெறவில்லை என்று நிதி நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே, அவர்களின் பெயரில் அலெக்ஸ் மோசடியாகக் கடன் பெற்று ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மோகனசுதா மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அலெக்ஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago