Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ரன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

“நாம் பல படங்களை இயக்குகிறோம். ஆனால் ஒரு சில படங்களில்தான் நாம் நினைத்தது நினைத்தபடியே அனைத்தும் சிறப்பாக அமையும். அப்படிப்பட்ட படங்களில் முக்கியமானது ‘ரன்’. தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், சண்டைப் பயிற்சியாளர், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா என ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கிய திரைப்படம் அது,” என்றார்.

இதையும் படியுங்க:- “கூகுள் மேப்லயே அந்த ஊர் இல்லையாம்!” – ரம்யா பாண்டியன் உடைத்த ‘அருள்வான்’ பட ரகசிய

தான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் ‘ரன்’ திரைப்படத்தை மீண்டும் உருவாக்குங்கள் அல்லது ரீ-ரிலீஸ் செய்யுங்கள் என்று தொடர்ந்து கேட்டு வந்ததாகவும், பலரும் கல்லூரி நாட்களில் பார்த்த படம், சென்னைக்கு வந்த பிறகு முதலில் பார்த்த படம், திருமணமான புதிதில் பார்த்த படம் என பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.

ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் வெற்றி குறித்து பேசிய லிங்குசாமி, “எந்த படம் வெற்றி பெறும், எது பெறாது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ‘கில்லி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

‘படையப்பா’ சிறப்பாக ஓடியது. ‘குஷி’ எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அப்படி அமையவில்லை. அதேபோல் ‘சச்சின்’ திரைப்படம் ரீ-ரிலீஸில் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தக் கணக்கு யாருக்கும் புரியாது. நானும் ஒரு ரசிகனைப் போலவே இந்த ரீ-ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,” என்றார்.

இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற யோசனையை தனது நண்பரும் தயாரிப்பாளருமான பாலா முன்வைத்ததாகவும், அவரது ‘ஜெகதாம்பா’ நிறுவனம் இந்த ரீ-ரிலீஸை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்க:- புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொல்ல ரூ.1 கோடி டீல்? 4 கைதிகள் மீது அதிர்ச்சி தகவல்!

‘ரன்’ எப்படி உருவானது?

‘ஆனந்தம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதே பாணியில் மற்றொரு படத்தை இயக்கக் கூடாது என்ற எண்ணம் தனக்கு இருந்ததாக லிங்குசாமி கூறினார்.

“ஒரு இயக்குநரின் இரண்டாவது படம் மிகவும் முக்கியமானது. முதல் படத்தைப் போலவே மீண்டும் குடும்பக் கதையாக எடுத்தால், அதே மாதிரியான இயக்குநர் என்ற முத்திரை விழுந்துவிடும். அதனால் திட்டமிட்டு முழுக்க ஆக்ஷன் கலந்த திரைக்கதையாக ‘ரன்’ படத்தை உருவாக்கினேன்,” என்றார்.

மேலும், இந்தக் கதையை நடிகர் மாதவனை மனதில் வைத்தே எழுதியதாகவும், நடிகர் ரஜினிகாந்திடம் கதை கூறியபோது அவருக்கும் மிகவும் பிடித்ததாகவும் தெரிவித்தார்.

மீரா ஜாஸ்மின் எப்படி தேர்வு செய்யப்பட்டார்?

‘ரன்’ திரைப்படத்தில் முதலில் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை என்றும், வேறு ஒரு நடிகையுடன் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் லிங்குசாமி கூறினார்.

“அந்த நடிகைக்கு தமிழ் தெரியவில்லை. நான் நினைத்த கதாபாத்திரத்தை அவரிடம் கொண்டு செல்ல மிகவும் சிரமமாக இருந்தது. நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பிறகு, இந்தக் கதாபாத்திரம் சரியாக வராது என்ற பயம் ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பை நிறுத்தி, ரஜினிகாந்த் சார் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினேன்,” என்றார்.

இதையும் படியுங்க:- திமுக-வில் அடுத்த ‘விக்கெட்’ கே.என்.நேரு..? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கு கட்டையைப்போடும் விஜய்..!

அப்போது, இயக்குநர் ஷங்கர் ‘பாய்ஸ்’ திரைப்படத்திற்காக பரிசீலித்திருந்த மீரா ஜாஸ்மினை நினைவுபடுத்தியதாகவும், பின்னர் அவரை அழைத்து கதை கூறியதாகவும் தெரிவித்தார்.

“அப்போது மீரா ஜாஸ்மின் ‘கஸ்தூரிமான்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நான் தமிழில் கதை சொன்னேன். எனது உதவி இயக்குநர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார்.

அந்த நாள்தான் என் கதையை ஆங்கிலத்தில் கேட்கும் அனுபவம் எனக்கும் புதிதாக இருந்தது. மீரா ஜாஸ்மினிடம் கதை சொல்லி முடித்த பிறகு, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவானது. அவர் படத்தில் இணைந்த பிறகு, அனைத்தும் சிறப்பாக அமைந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.

டிஜிட்டல் தரத்தில் ரீ-ரிலீஸ்

‘ரன்’ திரைப்படம் முதலில் ஃபிலிம் கேமராவில் படமாக்கப்பட்டதாகவும், தற்போது அதை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றியிருப்பதாகவும் லிங்குசாமி கூறினார்.

“படத்தின் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. இப்படிப்பட்ட கிளாசிக் படங்களில் தேவையில்லாத மாற்றங்கள் செய்ய விரும்பவில்லை. எந்தக் காட்சியையும் நீக்கவோ, புதிதாக சேர்க்கவோ இல்லை. அப்படியே ரசிகர்களுக்குக் கொடுக்கிறோம்,” என்றார்.

‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ் குறித்தும் கருத்து

‘அஞ்சான்’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “வணிக ரீதியாக மட்டுமல்ல, ரசிகர்களின் பார்வையிலும் அந்தப் படத்திற்கு புதிய மதிப்பு கிடைத்தது. ‘இப்போது படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது, மிகவும் விறுவிறுப்பாக உள்ளது’ என்று பலரும் கூறியது எனக்கு மிகுந்த மனநிறைவை அளித்தது. அந்த ரீ-ரிலீஸும் தனது நோக்கத்தை நிறைவேற்றியது,” என்று தெரிவித்தார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago