Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஸ்ருதி ரங்கராஜ், கோயம்புத்தூரில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு விருது வழங்கும் விழாவில் சிறந்த தொழில் சாதனையாளருக்கான விருதைப் பெற்றுக் கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவில் அவர் நிகழ்த்திய உருக்கமான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஸ்ருதி ரங்கராஜுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய அவர், இந்த அங்கீகாரம் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கம் மட்டுமே என்றும், இந்த விருது தனக்கான பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனக்கு இந்தப் பெருமையை வழங்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், தன்னை ஊக்குவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேடையில் பேசியபோது, தனது வாழ்க்கைப் பயணத்தில் உறுதுணையாக இருந்த கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

தனது வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பின்னால் தனது கணவர் மிகப்பெரிய தூணாக இருந்துள்ளார் என்றும், சவாலான சூழ்நிலைகளிலும் பொது வாழ்க்கையிலும் குடும்பத்தினர் அளித்த ஆதரவே இந்த அங்கீகாரத்திற்குக் காரணம் என்றும் உருக்கமாகக் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொண்டதாகக் கூறிய அவர், மக்களின் அன்பும் ஆதரவும் தான் தன்னை மேலும் வலிமையானவராகவும், முதிர்ச்சியடைந்தவராகவும் மாற்றியதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

மேலும், தனது தாயாருக்கும் குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்த அவர், தனது குழந்தைகளே வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுவதற்கான மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதாகக் கூறினார். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே தனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்றும் தெரிவித்தார்.

தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்ற தனது எண்ணம் குறித்து பேசிய அவர், “இது என்னைப் பற்றியது மட்டும் அல்ல. இன்றைய தலைமுறை பெண்கள் மிகவும் திறமையான தொழில்முனைவோர்களாக உருவெடுத்து வருகின்றனர். அவர்களில் ஒருவராக இருப்பதே எனது விருப்பம்,” என்றார்.

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், “மற்றவர்கள் கூறும் கருத்துகளால் எளிதில் பாதிக்கப்பட வேண்டாம். உண்மையை நீங்களே அறிந்து கொள்ளுங்கள். யாரும் முழுமையானவர்கள் அல்ல. வாழ்க்கை என்பது தினமும் கற்றுக்கொள்வதற்கான ஒரு பயணமாகும்,” என்று அறிவுறுத்தினார்.

மேலும், “நான் சமூக வலைத்தளங்களையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ அதிகம் பார்ப்பதில்லை. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. ஏதேனும் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டியிருந்தால், மாமியார் வீட்டிற்குச் செல்வோம்,” என்று சிரித்தபடி தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “உங்களை நீங்களே நம்புங்கள். எந்த வேலையைச் செய்தாலும் முழு ஈடுபாடு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். உங்கள் உழைப்புக்கு ஒரு நாள் நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும்,” என்று ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.

குடும்ப வாழ்க்கையையும் சமூகப் பணிகளையும் சமநிலையுடன் முன்னெடுத்து, பல தடைகளைத் தாண்டி சாதித்து வரும் ஸ்ருதி ரங்கராஜின் இந்த எதார்த்தமான மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சு, விழாவில் பங்கேற்ற பெண்களிடையிலும், இணையவாசிகளிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago