Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகத்தாது அணையை கட்டினால், எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.300 வரை உயரக்கூடும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

“மேகத்தாது அணையைத் தடுப்போம்… காவிரி ஆற்றைக் காப்போம்” என்ற தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி, திருவானைக்காவலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கர்நாடக அரசு மேகத்தாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீரின் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்றும், இதன் காரணமாக விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் நெல் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விளைச்சல் குறைவதால் அரிசி உற்பத்தி சரிந்து, அதன் விலை கடுமையாக உயரும் என்றும், குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து பேசிய அன்புமணி ராமதாஸ், “இது விவசாயிகளின் பிரச்சினை மட்டும் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினரின் பிரச்சினையும் ஆகும். குறிப்பாக பெண்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், மேகத்தாது அணை கட்டப்பட்டுவிட்டால் இன்று ரூ.30 முதல் ரூ.50 வரை கிடைக்கும் அரிசியின் விலை, எதிர்காலத்தில் ரூ.300 வரை உயரக்கூடும். ஏனெனில் நெல் விளைவிக்கத் தேவையான தண்ணீர் கிடைக்காது; சாகுபடிப் பரப்பும் குறைந்துவிடும்” என்று எச்சரித்தார்.

இதையும் படியுங்க  இந்து கோவில் முன் துவா..!. அன்னதானம் சமைத்த இஸ்லாமியர்..! மதங்களை வென்ற நல்லிணக்கம்..!

மேலும், “காவிரியில் உபரி நீர் இருந்தால்தான் தமிழ்நாட்டிற்கு விட முடியும். தண்ணீரே இல்லாத நிலை ஏற்பட்டால் குடிநீருக்குக் கூட தட்டுப்பாடு ஏற்படும். இதை தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகத்தாது அணை கட்டினால், தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதன் விளைவாக நெல் விவசாயம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் பாமக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையில், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல் வரத்து குறைந்துள்ளதால், வெளிச்சந்தையில் அரிசி விலை தற்போது கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரியாணிக்குப் பயன்படுத்தப்படும் சீரக சம்பா அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.96 வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போதிய மழையின்மை, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நெல் விளைச்சல் குறைவு, லாரி போக்குவரத்து கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களே தற்போதைய விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இதையும் படியுங்க  திருக்குறள் பொறிப்புகள் மறைந்ததால் அதிரடி நடவடிக்கை – தாமிரபரணியில் தவெக போஸ்டர்கள் அகற்றம்!

இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, “அரிசி கிலோ ரூ.300 ஆகும்” என்பது தற்போதைய சந்தை விலையை குறிக்கும் தகவல் அல்ல; மேகத்தாது அணை கட்டப்பட்டு, தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அரசியல் எச்சரிக்கையாகும்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago