Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

ஐரோப்பாவை உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில், நெதர்லாந்தில் வெறும் 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மின்னல் வெடிப்புகள் பதிவாகி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

நெதர்லாந்து அரசின் வானிலை ஆய்வு மையமான KNMI வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2026 ஜூன் 27 முதல் ஜூன் 28 வரை நடைபெற்ற கண்காணிப்பில், நாடு முழுவதும் 3,01,137 மின்னல் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. நெதர்லாந்து வரலாற்றிலேயே இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மின்னல் எண்ணிக்கையாகும்.

இந்தப் புயலின் உச்சக்கட்டத்தின் போது, நெதர்லாந்து மற்றும் வடக்கு ஜெர்மனியின் சில பகுதிகளில் வெறும் 30 நிமிடங்களில் 30 ஆயிரம் மின்னல்கள் பதிவாகின. அதாவது, ஒவ்வொரு வினாடிக்கும் சராசரியாக 17 மின்னல்கள் வானில் தோன்றியதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இரவு வானம் முழுவதும் தொடர்ந்து மின்னலால் ஒளிர்ந்ததால், அது ஒரு ஸ்ட்ரோப் லைட் (Strobe Light) போல காட்சியளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "22 மணி நேரம் தரையிறங்காமல் பறக்கும் புதிய Airbus A350! அடுத்த லெவல் தொழில்நுட்பம்”

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஐரோப்பாவின் பல நாடுகளில் 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை கடுமையான வெப்பநிலை நிலவியது. இதனால் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அதிகளவு வெப்ப ஆற்றலும் ஈரப்பதமும் தேங்கியிருந்தது.

இந்த நிலையில் திடீரென குளிர்ந்த காற்று நுழைந்ததால், வளிமண்டலத்தில் கடுமையான அழுத்த மாற்றம் ஏற்பட்டது. இதன் விளைவாக ‘குமுலோநிம்பஸ்’ (Cumulonimbus) எனப்படும் பிரம்மாண்ட இடிமேகங்கள் உருவாகி, இந்த சக்திவாய்ந்த மின்னல் புயல் உருவானதாக விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

தொடர்ச்சியான மின்னல் மற்றும் இடி முழக்கங்களால் மக்கள் அச்சமடைந்து வீடுகளிலேயே முடங்கினர். பல இடங்களில் மின்னல் தாக்கியதால் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. மேலும், பலத்த காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் கனமழை காரணமாக சில பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

இதன் தாக்கம் போக்குவரத்தையும் கடுமையாக பாதித்தது. ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிராங்க்பர்ட் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பல விமானங்கள் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

இதையும் படியுங்க  "ஸ்பெயினில் எல்லைகளை உடைத்த 60,000 அகதிகள்: 57 பேர் பரிதாப பலி.. அதிரடி ராணுவ நடவடிக்கை.. ஸ்தம்பித்தது ஐரோப்பா!"

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் மின்னல் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக 1,88,000 மின்னல்கள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், தற்போது 3,01,137 மின்னல்கள் பதிவாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தரவுகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு, இந்தப் புயலில் பதிவான மொத்த மின்னல் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளையே இந்த அபூர்வ இயற்கை நிகழ்வு வெளிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், உலக நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago