மும்பையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு வலி நிவாரணி மற்றும் சத்து மாத்திரைகள் எனக் கூறி விநியோகிக்கப்பட்ட மாத்திரைகள் தொடர்பாக பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த ஜூன் 26 அன்று மும்பையின் பைகுல்லா மற்றும் ரே ரோடு பகுதிகளில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது, முகமது ஃபயாஸ் பிரேம்ஜி என்ற நபர், நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தர்களுக்கு வலி நிவாரணி மற்றும் சத்து மாத்திரைகள் எனக் கூறி கேப்சூல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
அந்த மாத்திரைகளை உட்கொண்ட சிலருக்கு திடீரென உடல்நலக் குறைவு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட பரிசோதனையில், மாத்திரைகளில் விஷத் தன்மை கொண்ட இரசாயனம் கலந்திருப்பதாக சந்தேகம் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. டிசிபி ஜெயந்த் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாத்திரைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் ஃபயாஸ் பிரேம்ஜியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், புனேவைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், சமீபத்தில் மும்பைக்கு வந்து தங்கியிருந்ததும், ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கான காலி கேப்சூல்களை வாங்கியிருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், எலிகளை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஜிங்க் பாஸ்பைட் என்ற நச்சுப் பொருளையும் ஆன்லைன் மூலம் வாங்கியிருந்ததாகவும், சுமார் 14,900 கேப்சூல்களில் அந்தப் பொருளை நிரப்பி வைத்திருந்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கேப்சூல்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் இதுவரை 13 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
ஊர்வலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்கள் சந்தேகத்திற்கிடமாக மாத்திரைகள் வழங்கப்பட்டதை கவனித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததன் மூலம், மேலும் பலருக்கு மாத்திரைகள் விநியோகிக்கப்படுவது தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி, வெளிநாட்டு பயணங்கள், நிதி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
