சமூக வலைத்தளங்களில் ஜென்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த சிஜேபி (CJP) நையாண்டி இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” (CJP) மற்றும் “தேசிய ஒட்டுண்ணி முன்னணி” (NPF) ஆகியவை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மையான அரசியல் கட்சிகள் அல்ல. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட நையாண்டி இயக்கங்களாகவே இவை உருவாகின. அண்மைக்காலமாக இந்த இரண்டு இயக்கங்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் அவற்றின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து பார்க்கும்போது, கடந்த மே 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் நியமனம் தொடர்பான வழக்கின் விசாரணையின் போது, நாட்டின் சில இளைஞர்களின் செயல்பாடுகள் குறித்து “கரப்பான் பூச்சிகள்” மற்றும் “சமூகத்தின் ஒட்டுண்ணிகள்” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக இணையத்தில் சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், போலிப்பட்டம் பெற்றவர்களை மட்டுமே அப்படி குறிப்பிட்டதாக பின்னர் விளக்கம் அளித்தார். இருப்பினும் அந்த விளக்கத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள், அந்த விமர்சனத்தையே தங்களின் அடையாளமாக மாற்றிக் கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மே 16ஆம் தேதி டிஜிட்டல் கிரியேட்டரான அபிஜித் தீப்கே தலைமையில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற நையாண்டி சமூக வலைத்தளப் பக்கம் உருவாக்கப்பட்டது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தொடங்கப்பட்ட இந்தப் பக்கம், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பிரபலமடைந்தது.
“மிதிக்க நினைத்தாலும் சாகாமல் உயிர் வாழும் கரப்பான் பூச்சிகள் நாங்கள்” என்ற வாசகத்துடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில், தொடங்கிய மூன்றே நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இணைந்தனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணையத்தில் மிகப்பெரிய அலை உருவாக்கிய நிலையில், அதற்கு போட்டியாக மற்றொரு தரப்பு இளைஞர்கள் “தேசிய ஒட்டுண்ணி முன்னணி” என்ற பெயரில் புதிய பக்கத்தை உருவாக்கினர். இவ்விரு அணிகளும் சமூக வலைத்தளங்களிலேயே ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி போன்று செயல்படத் தொடங்கின.
இதில் மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” தங்களை அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி எனக் கூறிக் கொண்ட நிலையில், “தேசிய ஒட்டுண்ணி முன்னணி” அதற்கு எதிரான அணியாக செயல்பட்டது.
இந்நிலையில், இந்த கணக்குகள் தற்போது மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் முடக்கப்பட்டுள்ளன. சட்டரீதியான கோரிக்கைக்கு இணங்க இந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதச்சார்பற்ற, சோசலிச, ஜனநாயக, சோம்பேறித்தனம் ஆகியவற்றை தங்களின் கொள்கைகளாக அறிவித்திருந்த இந்த நையாண்டி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம், தொடங்கப்பட்ட நான்கு நாட்களிலேயே 90 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றது.
ஜென்சி இளைஞர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களும் இந்தப் பக்கத்தை பின்தொடர்ந்தனர். குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மகுவா மொய்த்ரா மற்றும் கீர்த்தி ஆசாத் ஆகியோரும் இந்தப் பக்கத்தை பின்தொடர்ந்தது பெரும் பேசுபொருளாக மாறியது.
இதன் பின்னரே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தப் பக்கத்தை தொடங்கிய அபிஜித் தீப்கே வெளியிட்ட பதிவில்,
“எதிர்பார்த்தபடியே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் கணக்குகளை முடக்குவதுதான் ஜனநாயகமா?” என்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 21ஆம் தேதி மதியம் 3 மணி நிலவரப்படி, அந்தப் பக்கத்தை 1 கோடி 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்துள்ளனர்.
அதேபோல், இந்த இயக்கத்திற்கு ஆதரவாக பல புதிய சமூக வலைத்தள கணக்குகளும் தொடங்கப்பட்டு வருகின்றன. அவற்றையும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
இந்த கணக்குகள் முடக்கப்பட்டாலும், அதே போன்ற பெயர்களில் தொடர்ந்து புதிய கணக்குகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமாக, பாரதிய ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமான பின்தொடர்பாளர்களை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுவரை, இந்த இயக்கத்தின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பூர்த்தி செய்து 6 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியை கடந்துள்ளது.
இதனால், சமூக வலைத்தளங்களில் உருவான ஒரு நையாண்டி இயக்கம், இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அரசியல் மற்றும் சமூக விவாதமாக மாறியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையால் அதிகாரப்பூர்வ கணக்குகள் முடக்கப்பட்டாலும், அதே பெயரில் புதிய கணக்குகள் தொடர்ந்து உருவாகி வருவது, இந்த இயக்கத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
