Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்துவிசை வளாகத்தின் (ISRO Propulsion Complex – IPRC) புதிய இயக்குநராக மூத்த விண்வெளி விஞ்ஞானி நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய இயக்குநர் ஜே. ஆசீர் பாக்கியராஜ், ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, நாராயணன் அப்பு ஜூலை 1, 2026 முதல் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாராயணன் அப்பு, சென்னை கிண்டியில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் (College of Engineering, Guindy) இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்றவர்.

பொறியியல் படிப்பை முடித்த பின்னர், 1989-ஆம் ஆண்டு மகேந்திரகிரியில் செயல்பட்டு வந்த திரவ உந்து அமைப்பு மையத்தில், தற்போது IPRC என அழைக்கப்படும் வளாகத்தில், விஞ்ஞானியாக தனது பணியைத் தொடங்கினார்.

ராக்கெட் உந்துவிசை சோதனை மற்றும் மதிப்பீடு தொடர்பான கிரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்ப மேம்பாட்டில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், இஸ்ரோவின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை மையத்தின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்க  மாமியாரோடு கள்ளக்காதல்… கையுங்களவுமாய்ப் பிடித்த 16 வயது மகள்.. கணவனும், தாயும் செய்த நள்ளிரவு துரோகம்..!

புதிய இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மகேந்திரகிரி உந்துவிசை வளாகத்தின் இணை இயக்குநராகவும், சிறப்பு விஞ்ஞானியாகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

விண்வெளித் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக பல உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

2002-ஆம் ஆண்டு, இந்திய அஸ்ட்ரோநாட்டிகல் சொசைட்டி வழங்கிய ‘ஸ்பேஸ் கோல்டு மெடல்’ விருதைப் பெற்றார்.

2016-ஆம் ஆண்டு, CE20 கிரையோஜெனிக் எஞ்சின் உருவாக்கத்தில் ஆற்றிய பங்களிப்பிற்காக இஸ்ரோ குழு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு இஸ்ரோ தனிநபர் திறமைக்கான மெரிட் விருதையும் பெற்றார்.

இஸ்ரோவின் மிக முக்கிய மையங்களில் ஒன்றான மகேந்திரகிரி உந்துவிசை வளாகத்தை வழிநடத்த, தமிழகத்தைச் சேர்ந்த திறமையான பொறியியல் பட்டதாரியும், அனுபவமிக்க விண்வெளி விஞ்ஞானியுமான நாராயணன் அப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago