Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை விமான நிலைய பழைய விமான நிலைய பகுதியில் அமைந்துள்ள சர்வதேச சரக்கு முனையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்கள் மூலம் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை, வெளிநாடுகளுக்கு சரக்குகள் அனுப்பப்படும் கார்கோ வளாகத்தில் ஒரு பார்சல் கேட்பாரற்ற நிலையில் நீண்ட நேரமாக கிடந்தது. இதை கவனித்த பாதுகாப்பு படை வீரர்கள், அந்த பார்சலில் வெடிப்பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடத்தினர். ஆனால் அதில் வெடிப்பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலைய கார்கோ சுங்க அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து பார்சலை திறந்து சோதித்தபோது, அதற்குள் வெள்ளை நிறப் பவுடர் இருந்தது. அந்த பார்சலில் “மருத்துவ ரசாயன பவுடர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதில் இருந்த செல்போன் எண் மற்றும் முகவரியை தொடர்புகொண்டபோது, அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பவுடர் மாதிரிகள் சென்னையில் உள்ள ரசாயன ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

இதையும் படியுங்க  "அரசாணை 204-க்கு எதிராகத் தமிழகத்தையே உலுக்கும் செவிலியர்களின் அறப்போர்!

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், அந்த பவுடர் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமின் என்ற போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பார்சலில் சுமார் 5 கிலோ அளவிலான போதைப்பொருள் இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.5 கோடி என்றும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்த போதைப்பொருள் பார்சலை கைப்பற்றி, போதை கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

முதற்கட்ட விசாரணையில், கடத்தல் கும்பல் சரக்கு விமானம் மூலம் போதைப்பொருளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்றிருக்கலாம் என்றும், ஆனால் அவர்களுக்கு உதவ வேண்டிய நபர் பணியில் இல்லாததும், சுங்க சோதனை தீவிரமாக இருந்ததும் காரணமாக, 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பார்சலை கேட்பாரற்ற நிலையில் விட்டுவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பார்சலில் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் கார்கோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க  புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொல்ல ரூ.1 கோடி டீல்? 4 கைதிகள் மீது அதிர்ச்சி தகவல்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago