https://republictn.com/

செங்கல்பட்டு மாவட்டம் கொழப்பாக்கம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆர்கிட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளி முடிந்து மாலை 4 மணிக்குள் வீட்டிற்கு சென்றடைய வேண்டிய மாணவர்களை, பள்ளி வாகனம் இரவு 9 மணி வரை அழைத்துச் செல்லாமல் தாமதப்படுத்தியதோடு, சில குழந்தைகளை நடுவழியிலேயே இறக்கிவிட்டதாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க பெற்றோர் முயன்றபோதும், நிர்வாகத்தினரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததாகவும், அவசரநிலையில் தொடர்பு கொள்ள யாரும் இல்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், பெற்றோர் எழுப்பிய கேள்விகள் மற்றும் புகார்கள் பள்ளியின் சமூக வலைதளக் குழுக்களில் பதிவு செய்யப்பட்டபோதெல்லாம் அவை உடனுக்குடன் நீக்கப்பட்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

ஒரு பெற்றோர் கூறுகையில், “மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வரவேண்டிய குழந்தை இரவு 8.45 மணி வரை வரவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை. குழந்தை எங்கு இருக்கிறது என்பதற்கான தகவலும் வழங்கப்படவில்லை. இதனால் கடும் பதற்றம் ஏற்பட்டது” என்றார்.

மற்றொரு பெற்றோர் கூறுகையில், “குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம். கட்டணத்தை விட மாணவர்களின் நலனும் பாதுகாப்பும் முதன்மை. பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளி வாகன ஓட்டுநர், புதியதாக சில மாணவர்கள் போக்குவரத்து வசதிக்காக சேர்க்கப்பட்டதால் அவர்களின் முகவரிகள் மற்றும் வழித்தடங்கள் முறையாக சரிபார்க்கப்படவில்லை என்றும், அனைத்து வழித்தடங்களும் புதிதாக அமைக்கப்பட்டதால் கடும் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இந்த தாமதம் குறித்து பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்விக்கு தெளிவான பதில் அளிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தாய் கூறுகையில், “முதல் நாளிலேயே குழந்தையை நாங்களே பள்ளியில் கொண்டு சென்று விட்டோம். மாலை 4 மணிக்குள் வீட்டிற்கு வந்துவிடும் என பள்ளி நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் மாலை 4.20 மணிக்கும் குழந்தை வரவில்லை. தொடர்ந்து தொடர்பு கொண்டபோது இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும் என்று கூறினர். ஆனால் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை வாகனத்திலேயே இருந்தது” என்றார்.

மேலும், “குழந்தை எங்கு இருக்கிறது என்பது குறித்த தகவல் வழங்கப்படவில்லை. நேரடி இருப்பிட விவரமும் பகிரப்படவில்லை. குழந்தையுடன் பேசுவதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை. குழந்தை சாப்பிட்டதா, தண்ணீர் குடித்ததா, உடல்நலன் எப்படி இருக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது பெற்றோர்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது” என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பெற்றோர் சார்பில் போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

பள்ளி வாகன சேவையில் ஏற்பட்ட இந்த கடுமையான அலட்சியம், பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 hours ago at 7 hours ago