https://republictn.com/

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணத் திட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள், சென்னை விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளன. மேலும், பல முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, அந்தமான், ஹைதராபாத், திருவனந்தபுரம், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை, ஷார்ஜா, தம்மாம் உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கும் இயக்கப்பட்டு வந்த சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விமான டிக்கெட்டுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதோடு, மாற்று விமான சேவைகளை தேடி பயணிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் தீவுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தினசரி நான்கு விமான சேவைகளை இயக்கி வந்தது. அப்போது வாரத்திற்கு மொத்தம் 14 விமான சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

விமான சேவைகள் குறைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக எரிபொருள் விலை உயர்வு கூறப்படுகிறது. விமான எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல விமான நிறுவனங்கள் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சில வழித்தடங்களில் சேவைகளை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விமான நிறுவனங்கள், பயணிகள் வருகை குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே சேவைகள் தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கேற்ப பயண அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன.

எனினும், விமான சேவைகள் குறைப்பு மற்றும் ரத்து நடவடிக்கைகளால் சென்னை விமான நிலைய பயணிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 hours ago at 5 hours ago