https://republictn.com/

பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? – வேலை செய்யும் இடத்திற்கே வந்து பெட்ரோல் ஊற்றிய போதை ஆசாமி; திருப்பத்தூரில் பதற்றம்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு பெண்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடையாஞ்சி கிராமத்தில் பெண்கள் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவன் மதுபோதையில் பெண்களிடம் ஆபாசமாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சில பெண்கள் தட்டிக் கேட்டபோது, நாகராஜ் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளான் இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்கிருந்த தென்னை மட்டையால் அவனை தாக்க முற்பட்டுள்ளனர்

இதனைத் தொடர்ந்து நாகராஜ், அங்கிருந்த பெண்களுடன் அடிதடியில் ஈடுபட்டதுடன், தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து பெண்கள் மீது ஊற்றி தீ வைக்க முயன்று இருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக அம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நாகராஜை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்தப்பட்ட விசாரணையில், நாகராஜ் தனது உறவினர் வீட்டிற்கு சொத்து தகராறு காரணமாக அடிக்கடி வந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததும், சம்பவத்தன்று 100 நாள் பணியில் இருந்த தனது உறவினரிடம் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அம்பலூர் போலீசார் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago