https://republictn.com/

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது உட்கட்சிப் பூசல்கள், நிர்வாகிகளின் கட்சித் தாவல் எனப் பலமுனை நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார்.

அ.தி.மு.க மீண்டும் ஆளுங்கட்சியாக மாற எடப்பாடி செய்ய வேண்டியது என்ன..? அ.தி.மு.க-வின் கோடிக்கணக்கான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முன்வைக்கும் 10 அதிரடி உத்திகள் இவை.

எம்.ஜி.ஆர் பாணி
1980-ல் எம்பி தேர்தலில் தோற்றவுடன் எம்.ஜி.ஆர் தனது தவறுகளைத் திருத்தி இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்திய வரலாற்றை எடப்பாடி படிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் நெஞ்சுரம்
1989-ல் இரட்டை இலை சின்னத்தை மீட்டு, தி.மு.க அசுர பலத்தில் இருந்தபோதே நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்று காட்டிய ஜெயலலிதாவின் அசாத்திய அரசியல் வியூகங்களை உள்வாங்க வேண்டும்.

சர்வாதிகாரத்தைத் தவிர்த்தல்
“நான் வைப்பதுதான் சட்டம்” என்ற ஈகோ மற்றும் சர்வாதிகார மனோபாவத்தைக் கைவிட்டு அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

பண பலம் மட்டுமே தகுதியல்ல
பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட், மாஜிக்களுக்கே மீண்டும் மீண்டும் பதவி என்ற நிலையை மாற்றி உழைப்பவர்களுக்கான கட்சியாக மாற்ற வேண்டும்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு
கட்சியில் பூத் கமிட்டி முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைத்துப் பொறுப்புகளிலும் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அதிக வாய்ப்பளிக்க வேண்டும்.

சீனியர்களின் அதிகார எல்லை
குறுநில மன்னர்கள் போலச் செயல்படும் மாஜிக்களின் அதிகாரத்தை உடைத்து, அடித்தட்டு மக்களுக்காகப் போராடும் புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும்.

சிறுபான்மையினர் பட்டியல் சமூக வாக்கு வங்கி
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வை விட்டு விலகிய இஸ்லாமியர்கள், பட்டியல் சமூக மக்களின் நம்பிக்கையைப் பெற அந்தச் சமூகங்களில் இருந்து புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும்.

கொள்கைப் பேச்சாளர்கள்
விவாதக் களங்களில் சிங்கை ராமச்சந்திரன், வைகைச்செல்வன், காளியம்மாள் போன்ற கொள்கை ரீதியாகத் தர்க்கம் செய்யும் திறமையான முகங்களை முன்னிறுத்த வேண்டும்.

பிம்பத்தை உடைத்தல்
அ.தி.மு.க-வை வெறும் ‘கொங்கு மண்டலக் கட்சி’யாகச் சுருக்கிவிடாமல், தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் சமூக மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

ஓய்வில்லாப் போர்க்குதிரைப் பயணம்
உலகக்கோப்பையில் 39 வயது மெஸ்ஸியும் 41 வயது ரொனால்டோவும் போர்க்குதிரைகளாக ஓடுவதைப் போல, எடப்பாடி பழனிசாமியும் ஓய்வில்லாமல் 234 தொகுதிகளுக்கும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்து இளைஞர் படையைத் தன் பின்னால் திரட்ட வேண்டும்.

இந்த 10 ஆக்கப்பூர்வமான மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி உடனடியாகச் செயல்படுத்தினால், அ.தி.மு.க நிச்சயமாக 2031 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆளுங்கட்சியாக விஸ்வரூபம் எடுக்கும் எனப் பாரம்பர்ய அ.தி.மு.க தொண்டர்கள் நம்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 days ago at 2 days ago