Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

திண்டுக்கல் மாவட்டம் பழனி–சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடும்பன் திருக்கோயிலில் 142 கிராம் தங்க நகைகளும் (சுமார் 17 பவுன்) மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேலும் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆன்மீக பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த 200 ஆண்டுகள் பழமையான இடும்பன் திருக்கோயில், பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாகவும் காவடி எடுத்தும் வரும் பக்தர்கள் முதலில் வழிபாடு செய்யும் முக்கிய தலமாகும். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் இந்த கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இக்கோயிலில் செயல் அலுவலராக இருந்த விமலா என்பவர் மாற்றலாகிச் சென்றதைத் தொடர்ந்து, புதிய செயல் அலுவலராக நரசிம்மன் பொறுப்பேற்றார். அவர் கோயிலின் இருப்புப் பதிவேடுகளையும் சுவாமி நகை இருப்பையும் சரிபார்த்தபோது முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்க  "அமைச்சரை விமர்சிப்பது அவதூறு ஆகாது! - சைபர் கிரைம் போலீஸுக்கு உயர் நீதிமன்றம் ‘நச்’ கேள்வி!"

பதிவேட்டில் குறிப்பிடப்பட்ட நகை அளவுக்கும் தற்போதைய இருப்புக்கும் இடையே வேறுபாடு இருப்பது தெரியவந்த நிலையில், சுமார் 142 கிராம் தங்க நகைகளும் 52 கிராம் வெள்ளிப் பொருட்களும் மாயமானது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பழனி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோயில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுவரை தெளிவான தகவல் எதுவும் கிடைக்காத நிலையில், போலீசார் மேலும் தீவிரமாக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆன்மீக பக்தர்கள் பெருமளவில் வருகை தரும் புனித தலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமான சம்பவம், உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago