தமிழக அரசியலில் பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதப்படாத விதியாக நீடித்து வந்த ‘கட்சி நிதி’ மற்றும் ‘அமைச்சர்களுக்கான கமிஷன்’ கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக முதல்வர் விஜய் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார். டெண்டர்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டுவர, அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை தற்போது தலைமைச் செயலக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
“அரசாங்கத்தின் டெண்டர்களில் இதுவரை ஆண்ட கட்சிகள் நிதியையோ, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான கமிஷனையோ பக்காவாகப் பங்கு போட்டு வாங்கி வந்திருக்கிறார்கள். நமது முக்கிய தேர்தல் வாக்குறுதியே ஊழல் இல்லாத ஆட்சியைத் தருவதுதான்; அதற்கு இந்த கமிஷன் கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும்,” என்று முதல்வர் விஜய் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், “நாம் கேட்காவிட்டாலும் நிறுவனங்கள் தேடி வந்து லஞ்சம் கொடுக்க முயல்வார்கள். எக்காரணம் கொண்டும் கையை நீட்டிவிடாதீர்கள். மீறி நடந்தால் பதவி பறிபோவதுடன், கடுமையான சட்டபூர்வ தண்டனையும் உறுதி,” என அதிகார வர்க்கத்திற்குச் சாட்டையடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்பெல்லாம் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலே, ஆளுங்கட்சியின் நிதிக்கும், துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் இத்தனை சதவீதம் கமிஷன் எனப் பேரம் பேசப்படும் சூழலே நிலவி வந்தது. இந்த ஊழல் நுழைவு வாயிலை உடைத்தெறியும் விதமாக, தற்போதைய தவெக அரசு சமீபத்தில் வெளியிட்ட டெண்டர்கள் மற்றும் புதிய ஒப்பந்தங்களில் ‘ஒரு பைசா கூட கமிஷன் இல்லை’ என்கிற நிலையைச் சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளது.
மக்களை நேரடியாகப் பாதிக்கும் இந்த லஞ்ச சிஸ்டத்தை மாற்றியமைக்க முதல்வர் விஜய் காட்டும் இந்தத் தீவிரம், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூய்மையான நிர்வாகத்தை நோக்கி நகரும் முதல்வரின் இந்த ‘நோ கமிஷன்’ அதிரடி, பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
