https://republictn.com/

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்மாற்றியில் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய லைன்மேன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி நடுக்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன், செம்மனார்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் நிரந்தர லைன்மேனாக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு, செம்மனார்கோவில் பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் கணேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது மேலே இருந்த உயர் மின்னழுத்த கம்பி அறுந்து, மின்சாரத்தை துண்டிக்க பயன்படுத்தப்படும் ராடில் பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கவனிக்காமல் ராடில் கை வைத்த கணேசன் மீது உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்மனார்கோவில் போலீசார், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கணேசனுக்கு ஹேமா என்ற மனைவியும், தனலட்சுமி என்ற மகளும், முத்துக்குமரன் என்ற மகனும் உள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago