Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் மற்றும் மணிகண்டன். இருவரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியைச் சேர்ந்தவர்கள். 39-வது வார்டில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவரின் மகன் உள்ளிட்ட நரேஷ், நவீன், காளீஸ்வரன், சுகுமார், பிரசாந்த் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரியம் வில்சனுக்கு ஆதரவாக, வார்டு நிர்வாகிகளான மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் அப்பகுதியில் வாக்கு சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து, கட்சியில் புதிதாக இணைந்த நரேஷ் உள்ளிட்டோர் தங்களுக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மணிகண்டனும் ஆனந்தனும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

மேலும், அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், போலீஸ் பூத் அமைக்கவும் தவெக நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக 23 சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிவிஆர் கருவிகள் வாங்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க  வசூல் ராஜாக்களுக்கு கல்தா… நேர்மைக்கு மட்டுமே சல்யூட்..! அதிரடி காட்டும் அமைச்சர் என்.ஆனந்த்..!

இந்த நடவடிக்கைகள், அப்பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. குறிப்பாக, இதற்கெல்லாம் காரணமாக மணிகண்டன் செயல்படுவதாக கருதிய நரேஷ் தரப்பினர் அவர் மீது பகைமை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மணிகண்டனை, நரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மணிகண்டன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டனின் மைத்துனர் விஷ்ணு, உறவினர்களுடன் சென்று நரேஷ் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க  "71 மாத ஏமாற்றம்… ஒரே உத்தரவில் சிறையிலடைத்த இளம் IAS அதிகாரி! பெற்றோரை கைவிடுவோருக்கு எச்சரிக்கை!"

இந்த சம்பவம் நடந்த மறுநாள் இரவு சுமார் 9.50 மணியளவில், விஷ்ணு அருகிலுள்ள கடைக்கு சென்று உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் 8-வது தெருவில் அவரை வழிமறித்த ஆறு பேர் கொண்ட கும்பல், கத்தி, கோடாரி மற்றும் பீர் பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஷ்ணுவின் தலையில் அருகில் கிடந்த பெரிய கல்லை தூக்கிப் போட்டு தாக்கிய பின்னர் அந்த கும்பல் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் விஷ்ணுவுக்கு உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட விஷ்ணு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலா, நரேஷ், நவீன்குமார், சுகுமார், காளீஸ்வரன், குள்ள பிரசாத், மணிகண்டன் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்க  குடும்பத் தகராறா? சொத்து விவகாரமா? தஞ்சையை உலுக்கிய சிறைபிடிப்பு சம்பவம்.. பின்னணி என்ன?

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரம்பத்திலேயே தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்றும், கைதான குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி விஷ்ணுவின் உறவினர்கள் புதுவண்ணாரப்பேட்டை வள்ளலார் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் உதவி காவல் ஆணையர் பவுல்ராஜ், கைதான குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago