Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மகிழ்ச்சியாகத் தொடங்கிய ஒரு பயணம், சில நிமிடங்களில் ரத்த வெள்ளத்தில் முடிந்துபோகும் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் நினைத்திருக்க மாட்டார்கள். பள்ளி விடுமுறையில் சென்னையில் உள்ள தன் தந்தையைப் பார்த்துவிட்டு, ஊர் திருவிழாவிற்காக ஜோலார்பேட்டைக்கு வந்திறங்கிய மூன்று சிறு பிள்ளைகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த விபரீதம், வெறும் விபத்து அல்ல. இது குடிகாரர்களின் திமிரும், அர்சு நிர்வாகத்தின் அலட்சியமும் இணைந்து நடத்திய ஒரு பச்சைப்பாதகம்!

சிதைந்த ஒரு குடும்பத்தின் கனவு..!
சென்னையில் பானிபூரி கடை நடத்தி வரும் சந்துரு என்பவரின் பிள்ளைகளான அனுஷ்கா (18), கனிஷ்கா (16), மௌனிஷ் (11) ஆகிய மூவரும் தங்களின் தாத்தா பெருமாளுடன் இருசக்கர வாகனத்தில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்குப் புறப்பட்டனர். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து வெறும் 500 மீட்டர் தொலைவு கூட அவர்கள் கடந்திருக்க மாட்டார்கள்… அதற்குள் மரணம் கார் வடிவில் எதிரே வந்தது.

தஞ்சாவூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் திலீப்குமார், சட்டத்தை மதிக்காமல், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்த வளைவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், பெருமாளின் இருசக்கர வாகனத்தின் மீது கோரமாக மோதி சின்னாபின்னமாக்கி உள்ளது.

இதையும் படியுங்க  "வியாசர்பாடியில் நடுங்கவைத்த நள்ளிரவு கொடூரம்! வாலிபர் முகம் சிதைத்துக் கொலை: 3 பேர் சிக்கினார்களா? பின்னணி என்ன?"

சிசிடிவி காட்சிகளின் கொடூரம்
விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது. கார் மோதிய வேகத்தில் தாத்தாவும் மூன்று பேரப் பிள்ளைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி, நெஞ்சை உலுக்கும் கொடூரம்.

இந்தக் கொடூர விபத்தில் 11 வயது சிறுவன் மௌனிஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தாத்தாவும், மற்ற இரு பெண் பிள்ளைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில், மரணப் படுக்கையில் மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை நுழைவாயில் முன்பு உறவினர்கள் கதறி அழுத சத்தம், அங்கே நின்றிருந்த ஒட்டுமொத்த பொதுமக்களையும் கண்ணீரில் மூழ்கடித்தது.

யார் செய்த துரோகம்?
இந்த விபத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன? மதுபோதையில் கார் ஓட்டிய சிறுவன் ஒருபுறம் என்றால், இந்த சாலையை இப்படி ஒரு விபத்து முனையாக மாற்றி வைத்திருக்கும் நிர்வாகச் சீர்கேடு மறுபுறம்.

கடந்த அதிமுக ஆட்சியில் வாணியம்பாடி-சேலம் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இரண்டு வருடங்கள் கழித்து போடப்பட்டது. இந்த சாலை வாணியம்பாடியில் இருந்து அரூர் பாப்பிரெட்டிப்பட்டி கூட்ரோடு வரை மட்டுமே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தனர்.

இதையும் படியுங்க  நடுவானில் கழன்ற டயர்.. அவசரமாக தரையிறங்கிய போது உடைந்த விமான மேற்கூரை.. பயணிகளின் நிலை என்ன?

அப்போது போடப்பட்ட சாலையில் ஆக்ரமிப்பு எங்கும் அகற்றவில்லை. நூற்றுக்கணக்கான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ‌சாலையை உயர்த்தி (Stormwater drain bridge) மழைநீர் வடிகால் பாலங்கள் அமைக்காமல் சாலை போடப்பட்டதாக. அப்போதே புகார்கள் எழுந்தன.

சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதே தவிர, ஆக்கிரமிப்புகள் எங்குமே அகற்றப்படவில்லை. சாலையை உயர்த்தி, முறையான மழைநீர் வடிகால் பாலங்களை அமைக்காததால், நூற்றுக்கணக்கான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போன்ற முக்கிய நகரங்களில் புறவழிச்சாலை அமைக்காமல், நகரத்திற்குள்ளேயே நான்கு வழிச்சாலையை நுழைத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விபத்து நடந்த ஜோலார்பேட்டை வளைவு மிகவும் அபாயகரமான பகுதி. அங்குதான் ரயில் நிலையப் பிரிவுச் சாலையும், பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. போதாதகுறைக்கு இந்த வளைவிலேயே ஷேர் ஆட்டோ ஸ்டாண்டும், வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும்?
மழைக்காலம் வந்துவிட்டால் வாணியம்பாடி முதல் சாமியார்புரம் கூட்ரோடு வரை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி, சாலையை மறைத்துக் கொள்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் எப்போது மரணம் நிகழுமோ என்ற அச்சத்திலேயே பயணிக்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்க  தமிழ்ச்செல்வன் மரணத்தில் சிக்கிய கொடூர தடயங்கள்! “மார்பில் கடித்த காயம், வயிற்றில் மர்ம திரவம்” – ஆணவப் படுகொலையா?

ஜோலார்பேட்டை வளைவில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் ஏராளமான உயிர்கள் பறிபோய்க்கொண்டே இருக்கின்றன. “மாவட்ட ஆட்சியரிடமும், ஆட்சியாளர்களிடமும் மனுக்கள் கொடுத்து, கோரிக்கைகள் வைத்து எங்கள் நாக்கு சலித்துப்போய்விட்டது” என்று அப்பகுதி மக்கள் ஆக்ரோஷமாக கொந்தளிக்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் காதுகளில் மக்களின் மரண ஓலம் விழுவதே இல்லை என்பதற்கு இந்த 11 வயது சிறுவனின் மரணமே சாட்சி.

இறந்த சிறுவனின் உயிருக்கு என்ன விலை பேசப் போகிறீர்கள்? ஆக்கிரமிப்புகளையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் இன்னும் எத்தனை நாளைக்குத் தாங்கிப் பிடிக்கப் போகிறீர்கள்? இனியாவது இந்த அபாயகரமான வளைவைச் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மக்களின் உயிரோடு விளையாடும் இந்தச் சாலை அவலத்திற்கு இந்த புதிய அரசாவது முற்றுப்புள்ளி வைக்குமா? இல்லையெனில், மக்களின் போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைத் தடுக்க முடியாது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago